பங்குசந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா மகாராஷ்டிரா மாநில தேர்தல்? வல்லுனர்கள் கூறுவதென்ன?
இன்று நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இந்திய பங்குசந்தையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளது. அதில், நாடு முழுவதும் பலராலும் எதிர்நோக்கப்படும் தேர்தலாக மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த மாநில தேர்தல் முடிவுகளை இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்தியாவின் மான்செஸ்டர் என்றும், பங்குசந்தை நகரமாகவும் விளங்குகிறது மகாராஷ்டிரா தலைநகர் மும்பை. அதே போல நாட்டின் ஒட்டுமொத்த GDPயில் மகாராஷ்டிரா மாநிலம் மட்டும் 13 முதல் 14 சதவீத பங்கு கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் மாநிலமாக திகழும் மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆளப்போகிறார்கள்? மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளா? அல்லது எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளா? என்றும் பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக இன்று (நவம்பர் 20) பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறைகளை தவிர்த்து இன்று பங்குச்சந்தைக்கு 3வது விடுமுறை தினமாகும். தேர்தலை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் பலர், கடந்த சில நாட்களாகவே பங்குசந்தையில் ஈடுபடாமல், மேம்போக்காக சந்தையை கவனித்து மட்டும் வருகின்றனர் என்று பங்குசந்தை வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், நடப்பது மஹாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் தானே தவிர , பங்குசந்தைக்கான தேர்தல் அல்ல. இந்த மாநில தேர்தல் மூலம் மாநிலத்தின் ரியல் எஸ்டேட் துறை மற்றும் மாநில கொள்கைக்கு உட்படும் தொழில்துறைகளில் மட்டுமே தேர்தலின் தாக்கம் இருக்கும். பொதுவான தாக்கம் இருக்காது என்றும் சிலர் கூறி வருகின்றனர். மத்திய அரசு நிதி கொள்கைகளால் மட்டுமே பங்குச்சந்தையில் தாக்கம் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குசந்தை குறிப்பிட்ட அளவு ஏற்றம் இல்லாமல் இருந்து வருகிறது என்றும், மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவினால் பங்குசந்தையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், ஒரு முழு வெற்றி, அதாவது ஏதேனும் ஒரு கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி என்றால் மட்டுமே பங்குசந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும் என பங்குச்சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் சரிவில் இருந்த பங்குச்சந்தை நேற்று (நவம்பர் 19) சற்று ஏற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தை 303 புள்ளிகள் உயர்ந்து 23,757 புள்ளிகளாக இருந்தன. அதே போல மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1044 புள்ளிகள் உயர்ந்து 78,383 புள்ளிகளாக இருந்தன.
இந்திய பங்குச்சந்தையில் தாக்கம் ஏற்படுத்துவதில், இந்திய தொழில்துறையில் ஏற்ற இறக்கத்தை தாண்டி, சர்வேதேச பங்குச்சந்தை தாக்கம், சர்வதேச பிரச்சனைகள், தேர்தல்கள் ஓர் காரணியாக இருக்கிறது. அதே போல, மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகளும் சிறு அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பங்குச்சந்தை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.