டெல்லி அணி விடுவித்ததற்கு சம்பளம் தான் காரணமா? மனம் திறந்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணி நிர்வாகம் மீண்டும் ரிஷப் பண்ட்டை ஏலத்தில் எடுக்கவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணி தக்க வைக்காத நிலையில், இது குறித்து பல வதந்தி தகவல் பரவியது. பரவிய அந்த வதந்தி தகவல் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரிஷப் பண்ட் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் டெல்லி அணி ரிஷப் பண்ட் கேட்ட சம்பளத்தைக் கொடுக்கவில்லை என்பதால் அணி நிர்வாகத்திற்கும் அவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகப் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அவர் அப்படிக் கூறிய காரணத்தால் இந்த தகவல் காட்டு தீ போலப் பரவிய நிலையில், ரிஷப் பண்ட் இப்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்துப் சுனில் கவாஸ்கர் பேசியதாவது ” டெல்லி நிச்சயமாக ஏலத்தில் ரிஷப் பண்ட்டை திரும்பி எடுக்கவேண்டும். டெல்லி அணியில் அதிகம் சம்பளம் வாங்கும் வீரர்களில் அவர் தான் முதலிடத்தில் உள்ளார். எனவே. சம்பளம் பிரச்சினை காரணமாக அவரை விடுத்துள்ளதாக நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ஒரு கேப்டன் தேவை என்பதால், டெல்லி நிச்சயமாக ரிஷப் பண்ட்டை ஏலத்தில் எடுக்கவேண்டும்” எனக் கூறியிருந்தார்.
சுனில் காவாஸ்கர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், அதனை பார்த்த ரிஷப் பண்ட் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “நிச்சியமாக என்னை டெல்லி அணி தக்க வைக்காததற்குக் காரணம் பணம் இல்லவே இல்லை என்பதை நான் இந்த நேரத்தில் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என கூலாக ரிஷப் பண்ட் பதில் அளித்தார். இதன் மூலம் சம்பளம் பிரச்சினை காரணமாக அணி அவரை விடுவிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.