நாளை மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் வாக்குப்பதிவு!
மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவும், ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு விறுப்பாக நடைபெற்றது. தேர்தல் விதிமுறைகளின்படி, தேர்தலுக்கு முந்தைய நாள் பிரச்சாரத்தை முடிக்கவேண்டும் என்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடைசி நாளான இன்று அனல் பறக்கும் இறுதிப்பிரச்சாரம் செய்து முடித்துக்கொண்டார்கள்.
மகாராஷ்டிரா தேர்தல்
நாளை நவம்பர் 20 புதன்கிழமை மகாராஷ்டிராவின் 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணியில் பாஜக (BJP), சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தலைமையில்), மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) உள்ளன. கூட்டணி தற்போது ஆட்சியில் உள்ளது, ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
அதைப்போல மற்றோரு புறம் , மகா விகாஸ் அகாடி (MVA) என்பது சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), NCP (சரத் பவார் தலைமையிலான) மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றின் கூட்டணியாகும். எனவே, சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் கணிசமான தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க இரு கூட்டணிகளும் போட்டியிடுகின்றன.
ஜார்கண்ட் தேர்தல்
ஏற்கனவே, 81 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த நவம்பர் 13-ஆம் தேதி முதற்கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 43 தொகுதிகளுக்குத் முதற்கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்ததாக மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் நாளை (நவம்பர் 20) -ஆம் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தல் தொடங்கும் நேரம்?
இந்த இரண்டு மாநிலங்களிலும் வாக்குப்பதிவானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, நாளை காலை 7 மணி முதலே வாக்காளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய வாக்கைபதிவு செய்யலாம்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதி?
இந்த இரண்டு மாநிலங்களுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெற்று முடிந்த பிறகு தேர்தலுக்கான எண்ணிக்கை வரும் நவம்பர் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்தபிறகு யார் வெற்றியாளர் என்பது அறிவிக்கப்படும்.