போருக்கு நடுவே இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்!
உக்ரைன் போருக்கு நடுவே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியா வருவதாக கூறப்படுகிறது.
ரஷ்யா : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வரவுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு கிரெம்ளின் மாளிகை பத்திரிகை செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வெளியிட்டுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டிற்கு சென்றபோது இந்தியா வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்ததது.
இந்நிலையில், அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். ‘சரியான தேதிக்காக காத்திருக்கிறோம்’ என்று அந்நாட்டு கிரெம்ளின் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் ரஷ்யா இடையே போர் தொடங்கிய பிறகு, முதல் முறையாக புதின் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுடன் தொடர்பில் உள்ளோம் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க, ரஷ்யாவுக்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியதால், ரஷ்யாவும் உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அனுமதி கொடுத்துள்ளார். இந்த பரபரப்பான போர் சூழலில், அதிபர் புடினின் இந்தியா வருகை உலக நாடுகளின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.