இந்தியா வருகை தரும் இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகா!
இலங்கை அதிபரான அனுரா குமார திசநாயகா அடுத்த மாதம் அரசின் அழைப்பை ஏற்று இந்தியா வருகை தரவுள்ளார்.
கொழும்பு : இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா அமோக வெற்றி பெற்று இலங்கையின் அதிபராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, இலங்கையில் கடந்த நவ-14ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இதில், மீண்டும் அதிபர் அனுரா குமார கட்சி அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில், நேற்று இலங்கையில் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூர்ய பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக இந்தியாவுக்கு தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற் கொள்ள இருக்கிறார். அடுத்த மாதம் டிசம்பரில் அனுர குமார, இந்திய அரசின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வருகை தர இருக்கிறார்.
இங்கு வரும் அவர் பிரதமர் மோடியுடன், இலங்கை மற்றும் இந்தியா இடையே உள்ள பிரச்சினைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இப்படியான பரபரப்பான சூழலில் இலங்கை அதிபர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.