“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!
தருமபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடக் கூடும் என மாவட்ட தலைவர் சிவா கூறியுள்ளார்.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். சமீபத்தில், நாகப்பட்டினம் அல்லது தூத்துக்குடி தொகுதியில் விஜய் போட்டியடுவார் என தகவல் வெளியானது.
பின்னர், விக்கிரவாண்டி அல்லது நாகை மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் எனத் தகவல் வெளியானது. இப்படி அவ்வப்போது, விஜய் போட்டியிட போகும் தொகுதி தொடர்பான தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடக் கூடும் என மாவட்ட தலைவர் சிவா கூறியுள்ளார். தவெக வழக்கறிஞர் பிரிவு சார்பாக, நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அம்மாவட்ட தலைவர் சிவா”2026 சட்டமன்றத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் விஜய் போட்டியிடுவார்” என்று கூறியுள்ளார். ஆனால் தவெக தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இதனிடையே, கூட்டணி கட்சி தொடர்பான தகவல் கசிந்த வண்ணம் உள்ளது. ஒரு தகவலின்படி, அதிமுகவுக்கு 154, தவெகவுக்கு 80 என தொகுதி பங்கீடு செய்து, 2026 தேர்தலை கூட்டாக சந்திக்க இரு கட்சிகளும் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதன் மூலம், விஜய் முன்மொழிந்த இலக்கை இபிஎஸ் வழி மொழிவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி நடந்து வெற்றியும் வசமானால், இபிஎஸ் முதல்வர், விஜய் துணை முதல்வராகலாம் எனக் கூறப்படுகிறது.