“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!
நடிகை கஸ்தூரிக்கு வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கிய நிலையில், புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு பேசும் சமூகத்தினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கஸ்தூரி சங்கரை ஹைதராபாத்தில் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி, ஹைதராபாத்தில் படத் தயாரிப்பாளர் வீட்டில் மறைந்திருந்தாக தகவல் கிடைத்தது. இந்த தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தும், அங்கு சென்று அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
இதையடுத்து, ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட கஸ்தூரி சென்னை அழைத்து வரப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
பின்னர், சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து வாகனத்தில் ஏறும் முன் ஒரு நொடி நின்று நடிகை கஸ்தூரி, “அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” என்று ஆவேசமாக கத்தி கூச்சலிட்டு கொண்டே வாகனத்தில் ஏறினார்.
அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் பொதுச் செயலாளர் அளித்த புகாரின் பேரில், நடிகை கஸ்தூரி மீது, 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளது. சிங்கிள் மதர் என்பதை சுட்டிக்காட்டி சொந்த ஜாமினில் வெளியே விடவேண்டும் என நீதிபதி முன் நடிகை கஸ்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.