“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!
டெல்லி அரசாங்கம் மத்திய அரசுடன் தொடர்ந்து சண்டையிட்டு கொண்டு வந்தால், டெல்லி முன்னேறாது என கட்சியில் இருந்து ராஜினாமா செய்த கைலாஷ் கெலாட், கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சி பதவி என அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்து கொண்டார். கைலாஷ் கெலாட், டெல்லி மாநில போக்குவரத்துத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட துறை அமைச்சராக பொறுப்பில் இருந்து வந்தார்.
அவர் டெல்லி மாநில முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில், டெல்லி எம்எல்ஏவாகவும், மாநில அமைச்சராகவும் மக்கள் பணி ஆற்ற எனக்கு பொறுப்புகள் வழங்கியதற்கு நன்றி. நமது கட்சி தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. நமது அரசியல் செயல்பாடுகளால் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்ய முடியாமல் இருக்கிறது.
குறிப்பாக நாம் , யமுனை ஆற்றை சுத்தம் செய்து தருவோம் என மக்களுக்கு கூறினோம். ஆனால், அதனை செய்ய முடியவில்லை. நம் மக்களுக்காக போராட வேண்டும். ஆனால் தற்போது வரை அரசியல் சூழலுக்காக மத்திய அரசுடன் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம். சாமானிய மக்களுக்கான கட்சியாக இருக்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழ தொடங்கிவிட்டது. டெல்லியின் முன்னேற்றம் தடைபட்டுள்ளது.
டெல்லி அரசாங்கம் மத்திய அரசுடன் தொடர்ந்து சண்டையிட்டு கொண்டு வந்தால், டெல்லி முன்னேறாது என்பது தெளிவாகிறது. இதனால் கட்சியில் இருந்து விலகுவதை தவிர வேறு வழி இல்லை.” என கடிதம் எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து தனது அமைச்சர் பதவி , ஆம் ஆத்மி கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் கைலாஷ் கெலாட்.