“2026 டார்கெட்., வெற்றியோ தோல்வியோ சண்டை செய்யணும்.!” பா.ரஞ்சித் ஆவேசம்.!
2026 சட்டமன்ற தேர்தலில் ஆம்ஸ்ட்ராங் மனைவியை திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றிபெற செய்ய வேண்டும் என பா.ரஞ்சித் பேசியுள்ளார்.
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் பல்வேறு கட்சி பிரமுகர்கள் , வழக்கறிஞர்கள் , ரவுடிகள் என 30 பேர் மீது காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ரவுடி திருவெங்கடம் என்பவர் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு ஆனந்த் என்பவர் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். நேற்று “காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங் ” என்ற பெயரில் புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
இந்நிகழ்வில், இயக்குனர் பா.ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பா.ரஞ்சித் பேசுகையில், “2026 தேர்தல் அரசியலில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அது தான் நம் அண்ணனுக்கு செய்யும் காணிக்கை. திருமதி ஆம்ஸ்ட்ராங் (போர்க்கொடி) அவர்களை திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏவாக மாற்ற வேண்டும். நாம் தனித்து பொட்டிட்டு வெற்றி பெற்ற வரலாறு இருக்கிறது. அதனை மீண்டும் செய்து காட்டுவோம்.
திருவள்ளூர் எனும் ஒரு தொகுதியை குறி வைத்து வேலை செய்வோம். நானும் வருகிறேன். திண்ணை பிரச்சாரம் செய்வோம். வீதி வீதியாக செல்வோம். இன்னும் 2 வருஷம் இருக்கு. வெற்றியோ தோல்வியோ முதலில் சண்டை செய்யனும். 2026 தேர்தலில் போட்டியிட வைத்து திருமதி ஆம்ஸ்ட்ராங்கை சட்டசபைக்கு அனுப்புவோம். நாம் யாருக்கும் பயப்பட போவதில்லை. ” என ஆவேசமாக பேசினார் இயக்குனர் பா.ரஞ்சித்.