தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!
தலைமறைவாக இருந்த கஸ்தூரியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் இன்று அவரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக மற்றும் திராவிட சிந்தத்தைப் பேசும் நபர்களைத் தாக்கி கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
இப்படி இருக்கையில் சமீபத்தில் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்று ஆவேசமாகப் பேசினார்.
அதில் அவர், “300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புர மகளிருக்குச் சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும் போது.. எப்போதோ வந்த இந்த பிராமணர்களைத் தமிழர்கள் இல்லை எனச் சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்?’ எனப் பேசி இருந்தார்.
இந்த கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், தெலுங்கு மக்களை அவர் இழிவு படுத்துகிறார் என அவர் மீது புகார் காவல்நிலையத்தில் குவிந்த வண்ணம் வந்தது. இது தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி கஸ்தூரிக்குச் சம்மன் வழங்கச் சென்றபோது அவர் தலைமறைவானர்.
இதனால், அவரை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த கஸ்தூரியை இன்று தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.