தமிழர் பகுதிகளிலும் வெற்றி: இலங்கை தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி வரலாற்று சாதனை.!
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயகேவின் தேசிய மக்கள் கட்சி 159 தொகுதிகளில் வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி, தேசிய மக்கள் சக்தி கட்சி 3-ல் 2 பங்கு இடங்களில் வென்று பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு, மீதமுள்ள 29 பேர் தேசிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நடந்த 196 இடங்களில், பெரும்பான்மையைப் பெற குறைந்தது 113 இடங்கள் தேவை என்ற நிலையில், அனுர குமார திசாநாயக்க கட்சி 123 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தி 40 இடங்களிலும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 8 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. குறிப்பாக, இலங்கை தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ், இலங்கையில் தனி ஒரு கட்சி இந்த சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
தமிழர் பகுதிகளிலும் வெற்றி
அதாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் கட்சிகளே வெற்றி பெறுவது வழக்கம். ஆனால், இந்த முறை தமிழ் அரசியல் கட்சிகளை வீழ்த்தி, வரலாற்றில் முதல் முறையாக தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது. தமிழ் அரசியல்வாதிகள் மீதான விரக்தி மற்றும் மாற்றத்தை தமிழர்கள் விரும்புவதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்னர்.
முன்னாள் எம்.பி.க்கள் தோல்வி
இந்த தேர்தலில் முன்னாள் எம்.பி.க்கள் மனோ கணேசன், எரான் விக்ரமரத்ன, ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பலர் தங்களுடைய எம்,பி இடங்களை இழந்திருப்பது இலங்கை அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
சொல்லப்போனால், யாழ்ப்பாணத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.பி. எம்.ஏ.சுமந்திரன், ப்ளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன், 2020-ல் அதிக வாக்குகள் பெற்ற அங்கஜன் ராமநாதன் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
மேலும், ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலர் தோல்வியை தழுவினர். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் கட்சிகளின் தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், மனோ கணேசன், செல்வராசா உள்ளிட்டோர் தோல்வி அடைந்தனர்.