சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
நாளை கார்த்திகை மாதம் பிறக்க உள்ள நிலையில், மண்டல காலத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது.
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு சுவாமியைத் தரிசனம் செய்வார்கள். இந்த முறை (நவ.16) கார்த்திகை ஒன்றாம் தேதி பக்தர்கள் கோவிலுக்குச் சென்று மாலை அணிவித்து தரிசனம் செய்ய வருகை தரவுள்ளனர்.
இந்நிலையில், இதனை முன்னிட்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. நடை திறப்பு 30,000 பக்தர்கள் முன்பதிவு செய்ததால், ஒரு மணிநேரம் முன்னதாகவே நடை திறக்கப்பட்டது. வழக்கமாக எப்போதுமே மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.
ஆனால், இந்த முறை தரிசனம் செய்யப் பல பக்தர்கள் கூடிய நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால் முன்கூட்டியே அதாவது 1 மணி நேரத்திற்கு முன்னதாக மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 11 மணிவரை கோயில் நடை திறந்திருக்கும்.
அதைப்போல, நாளை அதிகாலை 3 மணி முதல் நடைதிறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வரும் டிச.26 ஆம் தேதியும், மகர விளக்குப் பூஜை வரும் ஜனவரி 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.