ரூ.397 கோடி ஊழல்? செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் பரபரப்பு புகார்!
தமிழ்நாடு மின்சாரத்துறையில் ரூ.397 கோடி வரையில் முறைகேடு நடைபெற்றதாக அத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர் மீது, மின்சாரத்துறையில் சுமார் ரூ.400 கோடி அளவில் ஊழல் நடைபெற்றதாக லஞ்சஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் அக்கட்சி நிர்வாகி சி.டி.நிர்மல் குமார் இந்த புகாரை லஞ்சஒழிப்புத்துறையிடம் அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த புகாரில், கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் சுமார் 45,800 மின்மாற்றி வாங்கிபாட்டுள்ளது என்றும்,
இந்த மின் மாற்றிகள் வாங்கியதில் டெண்டர் முறைகேடு நடைபெற்றதாகவும், சுமார் ரூ.600 கோடிக்கு வாங்க வேண்டிய மின்மாற்றிகளை, ரூ.1000 கோடிக்கு வாங்கியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.397 கோடி வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக அறப்போர் இயக்கத்தினர் , மின்சாரத்துறையில் ஊழல் நடைபெற்றதாக டெண்டர் பட்டியலை வெளியிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் தான் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.