மருத்துவருக்குக் கத்திக் குத்து: விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை தாக்கிய விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று காலை நடந்த கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை ஒருவர் கத்தியால் குத்திவிட்டு சென்றார். படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி, அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவரை கத்தியால் தாக்கிவிட்டு சென்ற அந்த நபரை அங்கு இருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து அந்த இளைஞரை பிடித்து காவல்துறைக்கு தகவலை கொடுத்தனர். பின் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற கிண்டி காவல்துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு சென்று விசாரணை நடத்தியதில் சம்பவத்தில் ஈடுபடவரின் பெயர் விக்னேஷ் என்பது தெரியவந்தது. இந்நிலையில், விக்னேஷ் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது 127 (2), 132, 307, 506 (ii) உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
வாக்குமூலம்
அவரிடம் கிண்டி காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதற்கான வாக்குமூலத்தையும் விக்னேஷ் காவல்துறையிடம் கூறியுள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் படி, 6 மாதமாக கிண்டி அரசு மருத்துவமனையில் வயிற்று புற்றுநோய்க்கு விக்னேஷ் தாயார் சிகிச்சை பெற்று வந்து இருக்கிறார். மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என நினைத்து அவர் மீது விக்னேஷ் தாக்குதல் நடத்தியுள்ளார். தாய்க்கு கொடுக்கப்பட்ட மருந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என தனியார் மருத்துவமனை மருத்துவர் கூறிய காரணத்தால் அந்த கோபத்தில் இப்படியான சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.