ஒன்றாக இணையும் ஜியோ சினிமா – ஹாட்ஸ்டார்! ஓடிடி தளங்களை ஓட விட அம்பானி போட்ட ஸ்கெட்ச்!
இரண்டு பெரிய ஓடிடி தளங்கள் ஒன்றிணைந்த ஜியோ ஸ்டார் ஓடிடி தளம் நவம்பர் 14-முதல் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : ஓடிடி தளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் தளங்களில் ஒன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar). இந்த ஓடிடி தளத்திற்கு இணையாக ஒரு ஓடிடி தளம் கொண்டு வரவேண்டும் எனத் திட்டமிட்டு அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ சினிமா (JioCinema) என்ற ஓடிடி தளத்தைக் கொண்டு வந்தது.
அதில் பல சீரிஸ்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்கும் வசதியைக் கொண்டு வந்து முன்னணி ஓடிடி நிறுவனமாகவும் வளர்ந்தது. இந்த சூழலில், ரிலையன்ஸ் ஜியோ உரிமையாளர் அம்பானி நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற பெரிய ஓடிடி தளங்களை முந்துவதற்கு திட்டம்போட்டு அதிரடியான விஷயத்தைச் செய்து இருக்கிறார்.
அது என்னவென்றால், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமாவை ஒன்றாக இணைக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்த இரண்டு தளங்களும் இணையும் அந்த தளத்திற்கு ஜியோ ஸ்டார் எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னும், அதிகாரப்பூர்வமாகச் செயலுக்கு வரவில்லை என்றாலும். ஜியோ ஸ்டார் என்கிற பெயரில் விக்கிப்பீடியா பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த திட்டம் செயலுக்கு வருவது இதன் மூலம் உறுதியாகத் தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு ஓடிடி நிறுவனங்கள் ஒன்றாக இணைவதன் மூலம் இரண்டு தளங்களில் ஒளிபரப்பாகி வந்த அணைத்து நிகழ்ச்சிகள் ஜியோ ஸ்டார் தளத்தில் இருக்கும். அதற்குள் நாம் விரும்பிய நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கலாம். மொத்தமாக, இரண்டு நிறுவனங்கள் ஒன்று இணைவதால் 100க்கும் மேற்பட்ட சேனல் ஜியோ ஸ்டாரில் இருக்கும்.
இப்படியான அசத்தல் திட்டத்தை அம்பானி போட்டிருப்பது அமேசான், நெட்ப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களை மிஞ்சுவதற்குத் தான். ஏனென்றால், ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்கும் வசதியைக் கொண்டு வந்த பிறகு தான் ஜியோ சினிமாவின் வாடிக்கையாளர்கள் அதிகமானார்கள். எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மாதமும் நெருங்கியுள்ளது. இந்த நேரத்தில் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமாவை ஒன்றாக இணைத்தால் சரியாக இருக்கும் என்பதால் அம்பானி இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.
கண்டிப்பாக, ஜியோ ஸ்டார் ஓடிடி தளத்திற்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது என்றால், நெட்ப்ளிஸ்க் மற்றும் அமேசான் பெரிய பெரிய படங்களை வாங்குவது போல ஜியோ சினிமாவும் வாங்கி அதனை மிஞ்சக் கூட வாய்ப்பு இருக்கிறது. மேலும், தற்போது, இந்த இரு தளங்கள் இணைவதால், இதுவரையில் ஜியோ சினிமாவில் நேரலையாக ஒளிபரப்பாகும் ஐபிஎல் தொடர், இதர கிரிக்கெட் தொடர்களை பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என கருதப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.