கத்திக்குத்து விவகாரம் : ‘தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை’.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!
சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் மீது தாக்குதல் நடந்ததை ஏற்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறை கைதும் செய்துள்ளது. படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி, அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மருத்துவமனையில் மருத்துவர் மீது தாக்குதல் நடந்ததை ஏற்க முடியாது எனக் கோபத்துடன் பேசியுள்ளார். கத்தி குத்து சம்பவத்தில் காயப்பட்ட மருத்துவர் பாலாஜி கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை நேரில் பார்த்து நலம் விசாரிக்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மருத்துவமனைக்குச் சென்றார். நலம் விசாரித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜெயக்குமார் ” கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் மீது நடந்த கத்தி குத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சம்பவம். இந்த சம்பவத்தின் மூலம் உயிரைக் காக்கும் மருத்துவர்களுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது தெரிகிறது.
தமிழகத்தில் இது போன்ற வெட்டுக்குத்து சம்பவங்கள் இப்போது சாதாரணமாகிவிட்டது. இதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுக்க நான் வலியுறுத்துகிறேன். மக்களுக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவமனையில் குத்து பட்ட மருத்துவர் சிகிச்சை பெறுவது வேதனை அளிக்கிறது.அடிப்படை கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் அரசு தோல்வி அடைந்துள்ளது.
அடிப்படை கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் அரசு தோல்வி அடைந்துள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படாமல் தடுக்க வேண்டும்” எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.