“காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பில்லை”…வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்!
தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மிதமான மற்றும் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில், சென்னையில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே, கனமழை வாய்ப்பு எத்தனை நாட்கள் சென்னைக்கு இருக்கிறது என மக்கள் அச்சத்துடன் வானிலை அறிவிப்பை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில், சென்னை மக்கள் கனமழை தொடர்பாக அச்சப்பட தேவையில்லை என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பில்லை.
காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து கரையை கடக்கும். எனவே, சென்னையில் மழைப்பொழிவை பொருத்தவரை இதே நிலை நீடிக்கும். விட்டு விட்டு கனமழை அடிக்கடி பெய்யும். மற்றபடி, சென்னை மக்கள் வானிலை தொடர்பாக வெளியாகும் தகவலை பார்த்து அதிர்ச்சியடைய வேண்டாம்.
அதைப்போல, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். அதைப்போல, கனமழை பெய்யும் மாவட்டங்கள் என்னவென்றால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். வடகிழக்கு பருவமழையான அக்டோபர் 1 முதல் இன்று வரை 256 மி.மீ பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 1% குறைவு எனவும் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.