கங்குவா சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்ட படக்குழு! அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!
கங்குவா படத்தின் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தமிழக அரசு உத்தரவால் கவலையில் உள்ளனர்.
சென்னை : சமீபகாலமாக வெளியாகும் எந்த பெரிய படங்களுக்கும் அதிகாலை சிறப்புக் காட்சிகள் வழங்கத் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. அதற்கு முக்கியமான காரணமே, கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே தினத்தில் வெளியான துணிவு – வாரிசு ஆகிய படங்கள் தான். இரண்டும் பெரிய நடிகர்களின் படம் என்பதால் 1 மணிக்குத் துணிவு படத்தின் திரைப்பட சிறப்புக் காட்சியும் அதிகாலை 4 மணிக்கு வாரிசு படச் சிறப்புக் காட்சிக்கும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
அப்போது, சென்னையில் துணிவு படத்தினை கொண்டாடும்போது அஜித் ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து அவர் மீது லாரி ஏறியதால் உயிரிழந்தார். இதன் காரணமாக அதன்பிறகு வெளியான பெரிய படங்களில் சிறப்புக் காட்சிகள் அனுமதி கோரினால் கூட தமிழக அரசு அதனை ரத்து செய்து தான் வருகிறது. இருப்பினும், பெரிய படங்களை எடுக்கும் படக்குழுவும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி வருகிறது.
அந்த வகையில், 300 கோடிகளுக்கு மேல் பிரமாண்ட செலவில் எடுக்கப்பட்டுள்ள கங்குவா படம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்குக் கூடுதலாகக் காலை 5 மணி முதல் இரவு 2 மணி வரை சிறப்புக் காட்சிக்குத் திரையிட அனுமதி அளிக்கும்படி, அனுமதிகேட்டுப் படக்குழு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதி இருந்தது.
எனவே, சூர்யா ரசிகர்கள் பலரும் கண்டிப்பாகத் தமிழக அரசு அதிகாலை 5 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்கும் படத்தைக் கொண்டாடலாம் என எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு கவலையை கொடுக்கும் விதமாக, 14 மற்றும் 15ம் தேதி ஆகிய நாட்களுக்குக் கூடுதலாக இரண்டு காட்சிகளைத் திரையிட அனுமதி அளிப்பதாகவும், காலை 9 மணி முதல் மறுநாள் நள்ளிரவு 2 மணி வரை அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்படுகிறது எனவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சூர்யா நடிப்பில் கடைசியாகத் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் என்றால் 2022-ஆம் ஆண்டு வெளியான எதற்கும் துணிந்தவன் படம் தான். அந்த படத்திற்குப் பிறகு ஒரு ஆண்டுகளுக்கு மேல் எந்த படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
எனவே, கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள நிலையில், அதிகாலை சிறப்புக் காட்சிக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கும் அதிகாலையிலேயே திரையரங்குகளில் கொண்டாடலாம் என ரசிகர்கள் ஆசையாக இருந்தனர். ஆனால், அவர்களுக்குத் தமிழக அதிர்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.