“ஜெயலலிதா, கலைஞரை விட விஜய் பெரியவரா.?” மீண்டும் சீமான் ஆவேசம்!
ஜெயலலிதா, கலைஞர் இருக்கும்போதே நான் கட்சி ஆரம்பித்தவன். அவர்களை விட இவர் (விஜய்) பெரிய ஆளா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
சென்னை : விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் மாநாடு நடைபெறுவதற்கு முன்பு வரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயை விமர்சித்து பேசவில்லை. ஆனால், மாநாட்டில் விஜய் , தமிழ் தேசியமும் திராவிடமும் இந்த மண்ணின் இரு கண்கள் என கூறியதில் இருந்து சீமான் தனது விமர்சனங்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
மேலும், விஜய் கட்சி ஆரம்பித்ததால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி குறையும் என்று சில அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். மேலும் , நேற்று நாகப்பட்டினத்தில் 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் தவெக கட்சியில் இணைந்ததாக செய்திகள் வெளியாகின.
இச்செய்திகள் குறித்து இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சீமான், ” என்னை பின்தொடர்பவர்கள் பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்களை தேடுபவர்கள் அல்ல. அவர்கள் என்னை பின்தொடர மாட்டார்கள். போராட்டகளத்தில் தலைவனை தேடுபவர்களே என்னை பின்தொடர்வார்கள். காற்றடித்தால் பறக்கும் பதர் போல இருப்பவர்கள் என்னை பின்தொடர மாட்டார்கள். புயலே அடித்தாலும் அசராமல் இருப்பவர்களே என்னை பின்தொடர்வார்கள்.
சிலர் கூறுகின்றனர் அவர் (விஜய்) வந்தவுடன் சீமான் பயந்துவிட்டார் என்று. நான் பயந்துவிட்டேனா.? ஜெயலலிதா, கலைஞர் இருக்கும்போதே நான் அரசியலுக்கு வந்தவன். அவர்களை விட இவர் (விஜய்) பெரிய ஆளா? அவர்களுக்கு கூடாத கூட்டம் இவருக்கு கூடிவிட்டதா? ” என்று தவெக தலைவர் விஜய் பற்றி சீமான் ஆவேசமாக விமர்சித்து பேசினார்.
மேலும், காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கூறியது பற்றி பேசுகையில், “எனக்கு வாக்கு வங்கி குறையும் என கார்த்திக் சிதம்பரம் கூறுகிறார். எனக்கு வாக்கு வங்கி இருக்கிறது. அவருக்கு வாக்கே இல்லையே. நீங்களும் (கார்த்திக் சிதம்பரம்) நானும் ஒரே தொகுதியில் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்போம். யார் அதிக வாக்குகள் வாங்குகிறோம் என பார்ப்போம். ” என்று கார்த்திக் சிதம்பரம் பற்றியும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.