ஒரே நிகழ்வில் விஜய், ராகுல் காந்தி பங்கேற்கின்றனரா? திருமாவளவன் பதில்.!
டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் யார் யார் பங்கேற்கின்றனர் என்பதை விகடன் பதிப்பகம் தான் அறிவிக்கும் என திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை : வரும் டிசம்பர் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் அம்பேத்கர் பெயரில் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட விகடன் பதிப்பகம் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் (விசிக துணை பொதுச்செயலாளர்) நிறுவனமும் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த நிகழ்வு குறித்த பேச்சு தான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. இந்த நிகழ்வில் முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட இருந்தார். அப்போது விழா கடந்த ஜனவரி 14இல் அம்பேத்கர் பிறந்தநாளில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விசிக தலைவர் திருமாவளவன் அந்நிகழ்வில் பங்கேற்று புத்தகத்தை பெற்றுக்கொள்ள இருந்தார் என்றெல்லாம் கூறப்பட்டது.
பின்னர், இந்த நிகழ்வுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தவெக தலைவர் விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விசிக தலைவர் திருமாவளவன் முன்பு கூறியிருந்தார். மேலும், தவெக மாநாட்டிற்கு முன்பு விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றும், மாநாட்டிற்கு பின்பு, அரசியல் சூழ்நிலை கருதி இந்த நிகழ்வில் கலந்து கொள்வது பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் திருமாவளவன் கூறினார்.
இப்படியான சூழலில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் மீண்டும், டிசம்பர் 6 புத்தக வெளியீட்டு விழா பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்திருப்பது விகடன் பதிப்பகம் தான். அவர்கள் தான் இந்த நிகழ்வு குறித்தும், அதில் யார் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்தும் அறிவிப்பார்கள்.
வேண்டுமென்றே சிலர் குழப்பத்தை ஏற்படுத்த சில பேசப்பட்டு வரும் தகவல்களையே உறுதிப்படுத்தப்பட்ட தகவல்லகளாக அறிவித்து வருகிறார்கள். நான் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இசைவளித்து ஓராண்டு ஆகிறது. அப்போது, அவர்கள் கூறியது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். ராகுல் காந்தி கலந்து கொள்ள அழைப்பு விடுக்க உள்ளோம் என கூறினார்கள். இந்த நிகழ்வில் யார் யார் பங்கேற்க வேண்டும் என தீர்மானிப்பது நிகழ்ச்சியை நடத்தும் விகடன் தான் இன்னும் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு மாத காலம் இருக்கிறது.” என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்தார்.