இன்று 6 மாவட்டங்களில் கனமழை.. அடுத்த 6 நாட்களுக்கும் இதான் நிலைமை – வானிலை மையம் எச்சரிக்கை!
அடுத்த 6 நாட்களுக்கு அதாவது நாளை முதல் 15-ம் தேதி வரை தமிழக்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை : நேற்றய தினம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (09-11-2024) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இருதினக்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (09-11-2024) தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்றைய தினம் (09-11-2024) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 6 நாட்களுக்கு அதாவது நாளை முதல் 15-ம் தேதி வரை தமிழக்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன்படி, நாளை (09-11-2024) ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (11ம் தேதி) தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
சென்னை நிலவரம்:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.