ஜிம், யோகா மையங்களில் பெண்களுக்கு ஆண்கள் பயிற்சியளிக்க கூடாது.! உ.பி-யில் புதிய பரிந்துரை
உத்திர பிரதேச மாநிலத்தில் ஜிம், யோகா மையங்களில் பெண்களுக்கு ஆண்கள் பயிற்சி அளிக்க கூடாது உள்ளிட்ட சில பரிந்துரைகளை மாநில அரசுக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
லக்னோ : உத்திர பிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு பல்வேறு விதமாக பரிந்துரைகளை அம்மாநில மகளிர் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் அண்மையில் லக்னோவில் நடைபெற்றுள்ளது.
அதில் கலந்து கொண்ட மகளிர் ஆணைய உறுப்பினர்கள், பெண்களின் பாதுகாப்பானது பொது இடங்கள் மற்றும் வணிக பயன்பாட்டு இடங்களில் உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு உடற்பயிற்சி கூடம், யோகா பயிற்சி மையம், முடித்திருத்தும் நிலையம் ஆகியவற்றில் பெண்களுக்கு பெண் பயிற்சியாளர்கள், பெண் ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அப்படி, பெண்களுக்கு ஆண் பயிற்சியாளர் பயிற்சியளிக்க வேண்டும் என்றால் அதற்கு உரிய எழுத்துப்பூர்வ அனுமதி பெற்ற பின்னரே பெண்களுக்கு ஆண்கள் பயிற்சி அளிக்கவோ, பணியாற்றவோ முடியும் என்ற விதிமுறை கொண்டு வர வேண்டும் என மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரைகள் உத்திரப் பிரதேச மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதே தவிர இன்னும் மாநிலத்தில் அமலுக்கு கொண்டுவரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும், சில ஆண்களின் தவறான எண்ணங்கள் தடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே , உத்திர பிரதேச மாநிலத்தில், பெண்களின் பாதுகாப்பு கருதி இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை (நைட் ஷிப்ட்) பெண்கள், தொழிற்சாலை அல்லது நிறுவனங்களில் பணியாற்ற அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் பணியாற்ற வேண்டும் என்றால் உரிய அனுமதி பெற்ற பிறகே அந்நிறுவனம் பெண்களை பணிக்கு அனுமதிக்க முடியும் என்ற நடைமுறை உத்திர பிரதேச மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது.