ஹவுரா அருகே தடம் புரண்ட 4 ரயில் பெட்டிகள்! அதிர்ச்சியில் பயணிகள்!
செகந்திராபாத்-ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
ஹவுரா : மேற்குவங்க மாநிலத்தில் ஹவுரா அருகே செகந்திராபாத்-ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் 40.கி.மீ வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த கொண்டிருந்த போதே திடீரென நான்கு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அந்த பெட்டியிலிருந்த பயணிகள் தடம் புரண்டதால் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உடனே, சம்பவ இடத்திற்கு ரயில்வே துறை அதிகாரிகள் நேரில் விரைந்து தடம் புரண்ட பெட்டிக்குள் சிக்கி இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, தடம் புரண்ட பெட்டிகளிலிருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், ரயில் மெதுவாகச் சென்றதால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் சிறிய காயம் கூட இல்லை எனவும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ரயிலின் தடம் புரண்ட பெட்டிகளைச் சீரமைத்து மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகத் தெரியவந்துள்ளது. அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் பின் இந்த திடீர் விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி இப்படி ரயில் விபத்துக்கள் நடந்து வருவதால் ரயில்வே துறை கூடுதல் கவனம் செலுத்தி ரயில் விபத்துக்களைத் தவிர்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.