உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இன்று இந்த இடங்களில் மழை!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த நவ-6ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருந்த நிலையில் கடலோரப் பகுதியில் நிலவிய காற்று சுழற்சியால் தாழ்வுப்பகுதி உருவாவது தள்ளிப்போனது.
இதனால், மியான்மர் கடலோரப் பகுதியில் நிலவி வந்த காற்று சுழற்சி வலு இழந்ததால் நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது படிப்படியாக நகர்ந்து தமிழக கடலோர பகுதி நோக்கி வரலாம் எனவும் இதன் காரணமாக நாளை இரவு முதல் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், நவம்பர்-14 தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. அதே போல தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லெசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.