“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

அமரன் படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக கோரிக்கை வைத்துள்ளது.

Amaran - Tamil Nadu BJP

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘அமரன்’ திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை, நெல்லையில் திரையரங்கை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி, கோவை ரயில் நிலையம் அருகே உள்ள திரையரங்கையும், நெல்லையில் அலங்கார் திரையரங்கையும் முற்றுகையிட்டனர் எஸ்டிபிஐ கட்சியினர். இதில், கோவை சாந்தி திரையரங்கம் முன்பு போராட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

இந்த நிலையில், அமரன்’ படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும், படக்குழுவினரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பாஜக கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு பாஜக தனது எக்ஸ் பக்கத்தில், “சமீபத்தில் காஷ்மீரில் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி உயிர்நீத்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர் திரு. மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் “அமரன்” என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

இப்படம் முழுக்க முழுக்க தேசப்பற்றையும் இராணுவ வீரர்களின் தியாகத்தை பறைசாற்றும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுக் கதை என்பது படம் பார்த்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

ஆகையால் தான் தமிழக முதல்வர் உட்பட உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து தரப்பு மக்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். ஆனால், இப்படத்தில் இஸ்லாமிய மக்களை தவறாக சித்தரித்துள்ளதாக அவதூறுகளைப் பரப்பி, இப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தினை அறிவித்துள்ள SDPI-யின் வெறுப்பரசியலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

RSS அமைப்பின் பேரணியை ஆயிரம் கேள்விகளால் துளைத்தெடுத்து, அனுமதி கொடுக்க மறுத்த தமிழக அரசு, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இங்கிருக்கும் அமைப்புகள் “அமரன்” திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் செய்வதை வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் மற்றும் இப்படத்தில் பணியாற்றியவர்களை அச்சுறுத்தும் வகையில் சில அமைப்புகள் பேசி வரும் நிலையில், அக்கலைஞர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை பாஜக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்