“அமெரிக்க மக்கள் இதைத் தான் விரும்புவார்கள்”! தோல்விக்கு பின் திடீரென மக்கள் முன் பேசிய ஜோ பைடன்!
அமெரிக்காவில் அமைதியாக அதிகார பரிமாற்றம் நடைபெறும் என முன்னாள் அதிபர் ஜோ பைடேன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவில் 47-வது அதிபர் தேர்தலானது நிறைவடைந்து, 2-வது முறையாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வாகி இருக்கிறார். இதனால், உலக நாட்டு தலைவர்கள் ட்ரம்பிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பாகப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ், டிரம்பைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அதிபரான ஜோ பைடன், வெற்றி பெற்ற டிரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவித்து மக்கள் முன் உரையாற்றினார்.
மேலும், இந்த தோல்வியைக் குறித்து பைடன் என்ன பேசுவார் என மக்களிடையே எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நேற்று திடீரென மக்கள் முன் பேசினார். அவர் பேசியதாவது,”கமலா ஹாரிஸ் முடிந்தவரை வெற்றிக்காக முயற்சி செய்தார். அவரது குழுவும் தாங்கள் செய்ததை நினைத்துப் பெருமைப்பட வேண்டும்.
நேற்றைய தினம் நான் புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப்பை தொடர்பு கொண்டு பேசினேன். அவருக்கு வாழ்த்துக்களைச் சொன்னேன். இதனால், அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடக்கும். இதற்காக எனது குழுவும், டிரம்ப்பின் குழுவோடு இணைந்து பணியாற்றும். அமெரிக்க மக்களும் இதைத் தான் விரும்புவார்கள்.
நான் கமலா ஹாரிஸிடமும் பேசினேன். அவர் மக்களுக்காகச் சேவையாற்றும் மிகச் சிறந்த ஒரு நபர். அதேநேரம் இந்த தேர்தல் தோல்வியைச் சமாளிப்பது ஜனநாயகக் கட்சிக்குச் சற்று கடினம் தான். நாட்டு மக்களின் தேர்வை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நான் அதிபராக எனது கடமையைச் செய்வேன்.
நான் எதைச் சொல்லி பதவிப் பிரமாணம் செய்தேனோ அதன்படி நடப்பேன், அரசியலமைப்பை மதிப்பேன், ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடக்கும். இந்த தோல்வியால் ஜனநாயக கட்சியினர் துவண்டு போய்விடக்கூடாது. ஆனால், ஒன்றை மறந்துவிடாதீர்கள். நாம் மிகச் சிறந்த ஒரு ஆட்சியைக் கடந்த 4 ஆண்டுகளில் வழங்கி இருக்கிறோம்”, என ஜோ பைடன் பேசி இருந்தார்.