“தமிழ்நாட்டில் 2026-ல் கூட்டணி ஆட்சி நடக்கும்”…பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு!
2026ல் கூட்டணி ஆட்சி நடக்கும் ஆட்சி அதிகார பகிர்வு இருக்கும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சோளிங்கரில் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு உண்டு என அறிவித்திருந்ததற்கு ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஒரு பக்கம் ஆதரவும் எழுந்து வருகிறது.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சி இதற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் விதமாகப் பேசியிருக்கிறார். இன்று சோளிங்கரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “தமிழ்நாட்டில் 2026-ல் கூட்டணி ஆட்சி கண்டிப்பாக நடக்கும். அதில் பாமக கண்டிப்பாக இருக்கும். ஆட்சி அதிகார பகிர்வு இருக்கும்” என உறுதியாகத் தெரிவித்தார்.
அதன்பிறகு செய்தியாளர் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த அன்புமணி ராமதாஸ்” தேர்தலுக்கு இன்னும் 1 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது எனவே, வரும் காலங்களில் அது பற்றி முடிவு எடுக்கப்படும்” எனப் பதில் அளித்தார். அதன்பிறகு, மற்றொரு செய்தியாளர் ஒருவர் ” ஆட்சிக்கு வந்தால் கூட்டணிக் கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு உண்டு என விஜய் தான் அறிவித்து இருந்தார்.
எனவே அவருடன் உங்களுடைய கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கும் பதில் அளித்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் “இன்னும் அதற்கான காலங்கள் என்பது அதிகமாக இருக்கிறது. எனவே, இதற்கான முடிவுகள் எல்லாம் வரும் நாட்களில் பேசி முடிவெடுக்கப்படும்” என அறிவித்தார்.