“திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.,” – உதயநிதி பேச்சு.!
திமுகவை அழிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, தமிழ்நாட்டு மக்களே பதிலடி தருவார்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சையில் பேசியுள்ளார்.
தஞ்சை : 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை திமுக தலைமை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, 5 பேர் கொண்ட தேர்தல் கண்காணிப்பு குழு, 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் சட்டமன்ற தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தஞ்சையில் திமுக தொண்டர்கள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2026 தேர்தல் பற்றியும், திமுக கூட்டணி பற்றியும் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “திமுகவை அழிக்க வேண்டும் என சில நினைக்கிறார்கள். அவர்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள். திமுக தொண்டர்கள் உற்சாகமாக தங்கள் தேர்தல் பணிகளை செய்யுங்கள்.
ஏற்கனவே, பல அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் அதிமுகவும், யாரும் சீண்டாத பாஜகவும் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு விடாதா என்று காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக நம்முடைய தலைவரும் (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் கூறி வருகின்றனர். அதனால் உங்கள் தேர்தல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
நம்முடைய மதசார்பற்ற திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல வேண்டும். அதுவே நம்முடைய இலக்கு. இந்த இலக்கை நோக்கி நாம் செயல்பட வேண்டும். நமது திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல வேண்டும். 2026இல் 2வது முறையாக நமது தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக அமர வைக்க வேண்டும். 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும். ” என துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.