மீண்டும் சிறப்பு அந்தஸ்து : ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் அமளி – கைகலப்பு.!
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அம்மாநில சட்டமன்றத்தில் தேசிய மாநாடு கட்சி , PDP கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி : இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஆனது கடந்த 2019இல் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக அவை பிரிக்கப்பட்டது.
இந்த சட்டப்பிரிவு நீக்கத்திற்கு பிறகு அண்மையில் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்து, உமர் அப்துல்லா முதலமைச்சரானார். அப்போது முதலே அவர் முன்மொழிந்த கோரிக்கை என்பது, ஜம்மு காஷ்மீரில் நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறுவது என்பதே ஆகும்.
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு நேற்று நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற கூட்டத்தொடரில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைக்கு பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த சிறப்பு அந்தஸ்து திரும்ப வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.
அப்போதே பாஜக எம்எல்ஏக்கள் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் எந்த கருத்தையும் கூறவில்லை. கடும் அமளிக்கு நடுவில் நேற்று அந்த தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, இன்று மீண்டும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கூடியது.
அப்போது , PDP (மக்கள் ஜனநாயக கட்சி) கட்சி எம்எல்ஏக்கள் , காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என கூறி பதாகைகளை ஏந்தி வந்தனர். இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அமளியில் வாக்குவாதம் முற்றி எம்எல்ஏக்களுக்கு இடையே வாக்குவாதம் கைகலப்பு, தள்ளு முள்ளாக மாறியது. இதனை அடுத்து, காவலர்கள் வரவழைக்கப்பட்டு அமளியில் ஈடுப்பட்ட உறுப்பினர்களை தனித்தனியே அழைத்து சென்றனர். இதனால் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.