2026-ல் கூட்டணி ஆட்சியா.? கையெடுத்து கும்பிட்டு கிளம்பிய திருமா.!
தமிழ்நாட்டில் 2026இல் கூட்டணி ஆட்சியா என்ற கேள்விக்கு, திருமாவளவன் கையெடுத்து கும்பிட்டு, "இது பொருத்தமில்லாத கேள்வி" எனக் கூறிவிட்டு சென்றார்.
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் , விசிக எம்பி திருமாவளவன் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்வு முடிந்த பிறகு திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “2024 – 2025ஆம் ஆண்டுக்கான திட்ட வளர்ச்சி குறித்த முதல் கூட்டம் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் , அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஏற்கனவே முடிவுற்ற பணிகள், இனி முடிக்க வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அடுத்த ஆலோசனை கூட்ட அமர்வில் நிலுவையில் உள்ள திட்டங்கள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என திருமாவளவன் தெரிய்வித்தார்.
அப்போது, அவரிடம், 2026இல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதா.? அப்படி அமையும் பட்சத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கூற்று குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வியை கேட்டவுடன், கையெடுத்து கும்பிட்டு, “இது இப்போது பொருத்தமில்லாத கேள்வி, வாய்ப்புக்கு நன்றி என தெரிவித்துவிட்டு சென்றார்.” விசிக தலைவர் திருமாவளவன்.
ஏற்கனவே, தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக விசிக எழுப்பிய ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்ற கூற்று விஜயின் தவெக மாநாடு வரை எதிரொலித்தது. மேலும், தவெக – விசிக கூட்டணி அமைக்குமா என்ற அளவுக்கு சென்று பின்னர், “2026 தேர்தலிலும் திமுக – விசிக கூட்டணி தொடரும் ” என திருமாவளவன் அறிவிக்கும் வரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.