“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!
2026இல் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என துணை முதல்வர் உதயநிதி சவால் விடுத்துள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் மரகதம் கந்தசாமி மண்டபம் முன்பு புதிதாக வெண்கலத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவசிலையினை தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தற்போது திறந்து வைத்தார்.
சிலையை திருந்து வைத்தபின் கிராமப்புற மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். பின்னர், மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “2026 சட்டமன்ற தேர்தலில் நம்மை எதிர்த்து யார் வந்தாலும், எப்பேர்பட்ட கூட்டணி அமைத்தாலும், எந்த திசையில் இருந்து வந்தாலும், டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி, திமுக வெற்றியை மட்டுமே பெறும்” இவ்வாறு விஜய்க்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னதாக, விழுப்புரத்தில் நடைபெற்ற மாநாட்டில் விஜய், திமுகவை விமர்சித்த நிலையில், உதயநிதியின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆம், இதே விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி, விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மிகவும் பிரம்மாண்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்தது.
அப்பொழுது, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மத்தியில் எழுச்சூரை ஆற்றினார் அக்கட்சியின் தலைவர் விஜய். இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இருந்தாலும், மாநாட்டில் திமுக குறித்து நேரடியாக விமர்சித்த நிலையில், திமுகவினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.