அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்? மாகாண பிரதிநிதிகள், மக்கள் வாக்குகள், முக்கிய விவரம் இதோ..,
அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடைபெறுகிறது.? எல்க்ட்ரோல் காலேஜ் உறுப்பினர்கள் என்றால் யார்.? மாகாணங்களின் முக்கியத்துவம் எனப் பல்வேறு தகவல்களை இதில் காணலாம்.
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை 4.30க்கு தொடங்குகிறது. அமெரிக்க தேர்தலை ஏன் உலகமே எதிர்நோக்குகிறது என்றால், அடுத்த 4 ஆண்டுகள் அமெரிக்காவை யார் வழிநடத்தப்போகிறார்கள் என்ற முடிவு மட்டுமல்ல அடுத்த 4 ஆண்டுகளுக்கு உலக வர்த்தகம், அரசியல் எப்படி செயல்பட போகிறது என்பதையும் தீர்மானிக்கும் தேர்தலாக அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளது. அந்தளவுக்கு உலக வர்த்தகம் , அரசியலில் அமெரிக்காவின் பங்கு உள்ளது
நவம்பர் முதல் செவ்வாய் :
வழக்கமாக இந்தியாவில் நடைபெறும் தேர்தல் போல பதவிக்காலம் முடிந்து தேர்தல் தேதி அறிவித்து மக்கள் நேரடியாக வாக்களித்து தலைவரை தேர்ந்தெடுப்பது போல இந்த தேர்தல் இருக்காது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் வழக்கம் போல 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பர் மாதம் முதல் செவ்வாய் கிழமை நடைபெறும். அதே போல, ஜெயிக்கும் பிரதிநிதிகள் ஜனவரியில் தான் பதவியேற்றுக்கொள்வர்.
மாகாணப் பிரதிநிதிகள் :
அமெரிக்காவில் மக்கள் நேரடியாக வாக்களித்தாலும், அந்த மாகாணத்தில் உள்ள பிரதிநிதிகள் (Electoral College) வாக்களித்து தான் அதிபர் தேர்வு செய்யப்படுகிறார். மக்கள் பெரும்பான்மையாக ஒருவருக்கு வாக்களித்து, பிரதிநிதிகள் எண்ணிக்கை பொறுத்து வேறு ஒருவர் அதிபராக பொறுப்பேற்ற நிகழ்வு இதுவரை அமெரிக்காவில் 5 முறை அரங்கேறியுள்ளது.
அதாவது, அமெரிக்காவில் 50 மாகாணங்கள் மற்றும் தலைநகர் வாஷிங்க்டன் என மொத்தம் 538 மக்கள் பிரதிநிதிகள் (எலக்டோரல் காலேஜ் ) உள்ளனர். ஒவ்வொரு மாகாணத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை கொண்டு பிரதிநிதிகள் எண்ணிக்கை உள்ளது. அதிகபட்சமாக கலிபோர்னியா மாகாணத்தில் 54 பிரதிநிதிகள் உள்ளனர்.
அமெரிக்க தேர்தல் :
உதாரணமாக, ஒரு மாகாணத்தில் பெரும்பாலான மக்கள் ஒரு பிரதமர் வேட்பாளருக்கு வாக்களித்தால் அந்த மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதிநிதிகள் வாக்குகளும் பெரும்பாலான வாக்குகள் பெற்ற வேட்பாளருக்கு சென்றுவிடும். இப்படித்தான் அனைத்து மாகாணங்களிலும் மக்கள் வாக்களித்து, அதன் மூலம் பிரதிநிதிகள் வாக்குகள் அதிபர் வேட்பாளருக்கு செல்லும்.
தோல்வியில் வெற்றி :
மக்கள் நேரடியாக வாக்கு செலுத்தாத காரணத்தால், இதில் சில சமயம் மக்கள் ஆதரவு இருந்தும், பிரதிநிதிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் இதுவரை 5 முறை அதிபர் தேர்தலில் குறைவான வாக்குகள் பெற்றவர்கள் அதிபராக்கியுள்ளனர். கடந்த 2016 தேர்தலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 46.1 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் , ஹிலாரி கிளிண்டன் 48.2 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் , பிரதிநிதிகள் எண்ணிக்கையின்படி டொனால்ட் டிரம்ப் அதிபரானார்.
கள நிலவரம் :
தற்போது, ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் , இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் தற்போது அமெரிக்க துணை அதிபராக உள்ளார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
முன்னதாக ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது, டிரம்பிற்கு ஆதரவு அதிகமாக இருந்தது. அதன் பிறகு கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அந்த கணிப்பு தலைகீழாக மாறியது. இருந்தும் தற்போதைய நிலவரப்படி, கமலா ஹாரிஸ் – டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 முக்கிய மாகாணங்கள் :
இந்த தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் ஸ்விங் ஸ்டேட்டஸ் எனப்படும் , நெவாடா, வட கரோலினா, விஸ்கான்சின், அரிசோனா, இச்சிகன், ஜார்ஜியா, பென்சில்வேனியா ஆகிய 7 மாகாணங்களில் மட்டும் மொத்தம் 92 பிரதிநிதிகள் உள்ளனர். இந்த மாகாணங்களில் தான் டிரம்ப் – கமலா ஹாரிஸ் இடையே போட்டி கடுமையாக உள்ளது என உள்ளூர் கருது கணிப்புகள் கூறுகின்றன.
வரிசைகட்டும் தொழிலதிபர்கள் :
இந்த கடும் போட்டியை உறுதிப்படுத்தும் நோக்கில், இதுவரையில் அதிபர் தேர்தலில் மறைமுக ஆதரவை மட்டுமே அளித்து வந்த அமெரிக்க தொழிலதிபர்கள், இந்த முறை வெளிப்படையான ஆதரவையும் சிலர் மேடை தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பில் கேட்ஸ் உட்பட 76 தொழிலதிபர்கள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவளித்துள்ளனர். எலான் மஸ்க் உட்பட 49 தொழிலதிபர்கள் டொனால்ட் டிரம்பிற்கும் ஆதரவளித்துள்ளனர். பில்கேட்ஸ், கமலா ஹாரிஸுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.420 கோடி ) தேர்தல் நிதியாகவும், மஸ்க் , டிரம்பிற்கு 132 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.1000 கோடி) தேர்தல் நிதியும் அளித்துள்ளனர்.