‘இந்த படத்தின் மூலம் என் அப்பாவை நான் பாத்துட்டேன்’ – எமோஷனலான சிவகார்த்திகேயன்!
அமரன் திரைப்படம் வெற்றியடைந்த நிலையில் நேற்று சென்னையில் படக்குழு வெற்றி விழாவை கொண்டாடியது.
சென்னை : கடந்த அக்.31-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல ஒரு வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தை அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் பாராட்டியும் வருகின்றனர்.
ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைக் கூறும் இந்த ‘அமரன்’ திரைப்படம் வசூலிலும் சாதனைப் படைத்தது வருகிறது. அதன்படி, உலக அளவில் இந்த படம் ரூ.125 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், வசூலைத் தாண்டி விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த படத்தில் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் என் தந்தைக்கும், முகுந்த் சாருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது எனத் தனது தந்தையைப் பற்றிப் பேசும் போது மிகவும் எமோஷனலாக பேசி இருக்கிறார். அவர் இது குறித்துப் பேசியதாவது, “எங்க அப்பா லீவ் எடுத்து நான் பார்த்தது இல்லை.
இந்த படத்தைச் சரியாக பண்ணிடணும்னு நினைத்ததுக்குக் காரணம் என்னுடைய தந்தை தான். 21 வருடமாக அவருடைய நினைவில் தான் இருக்கிறேன். முகுந்த் சாருக்கும் அப்பாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. என் அப்பா இந்த மாதிரி தான் ஊருக்கு வரேன்னு சொன்னாரு.
ஆனால், அடுத்த நாள் நான் காலேஜ் சென்று வரும் போது வீட்டில் கூட்டமாக இருந்தது. அப்பா இறந்திட்டார்னு தெரிஞ்சது. அப்பாவோட இறுதிச் சடங்கு முடிக்கும் போது அவருடைய எலும்பைப் பார்த்தேன். அங்க உடைஞ்சது அப்பாவோட எலும்பு மட்டுமில்ல 17 வயசு பையனான என்னுடைய மனசும் தான்.
இந்த படத்தோட க்ளைமேக்ஸ் மாதிரி தான் ஜனாதிபதியிடம் எங்க அம்மா மெடல் வாங்கினாங்க. இந்த படத்தின் மூலமாக என்னுடைய அப்பாவை நான் பார்த்து விட்டேன். முகுந்த் வரதராஜன் வாழ்க்கைக்கும், என் அப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அப்பா எங்கேயும் போகல, இங்க தான் அனைவருடைய கைதட்டல்கள்லாக இருக்கிறார்.” என்று சிவகார்த்திகேயன் எமோஷனலாகப் பேசி இருந்தார்.