திமுகவை விமர்சனம் செய்ய தான் விஜய் கட்சி தொடங்கியுள்ளார் – CPI மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி!
கொள்கை என்ற பெயரில் த.வெ.க தலைவர் விஜய் அரைத்த மாவையே அரைத்துள்ளார் என - கும்பகோணத்தில் CPI மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
கும்பகோணம் : த.வெ.க மாநாட்டில் விஜய் திமுகவை விமர்சித்துப் பேசியிருந்ததும், ஆட்சிக்கு வந்தால் கூட்டணிக் கட்சிக்கும் பங்கு உண்டு எனக் கூறியது இன்னும் அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாபிக்காக இருந்து வருகிறது. அவர் திமுக குறித்துப் பேசியதற்குக் கட்சியைத் தேர்ந்த தலைவர்கள் பலரும் பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள்.
ஏற்கனவே, அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் பேசி இருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூரில் நடந்த சான்றிதழ் வழங்கும் விழாவில் பேசும்போது ” திமுக வளர்வது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் தான், புதியதாக வருபவன் எல்லாம், புதுசு புதுசாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழியவேண்டும், ஒழியவேண்டும் என்ற அந்த நிலையில் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என மறைமுகமாக விஜயை சாடி பேசியிருந்தார்.
Read More- “வாழ்க வசவாளர்கள்., ” விஜயை விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலின்.?
அதைப்போல, மற்றொரு பக்கம் விஜய் அறிவித்துள்ள கொள்கை குறித்தும் விமர்சித்துப் பேசி வருகிறார்கள். ஏற்கனவே, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் அறிவித்த கொள்கை குறித்து கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருந்தார். இந்த நிலையில், விஜய் அறிவித்துள்ள கொள்கை குறித்தும் ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்கு உண்டு என அவர் கூறியது குறித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது ” திமுகவை எதிர்ப்பதற்காகத் தான் விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார். அதேகாரணமாகத் தான் திமுகவை எதிர்த்துப் பேசிக்கொண்டு வருகிறார். இது பற்றி கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை” எனப் பதில் அளித்தார்.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர் விஜய் அறிவித்துள்ள கட்சிக் கொள்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எனக் கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அவர் ” மாநாட்டில் அவர் நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார். அவர் பேசியதைப் பத்திரிக்கைகள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே அரைக்கப்பட்ட மாவைத் திரும்ப அரைத்துக்கொண்டு இருக்கிறார். இதனால் மாவு தான் வீணா போகும். கூட்டணி ஆட்சி குறித்து விஜய் பேசியிருப்பது, அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்றுதான் அழைப்போம் ” எனக் கிண்டலாக முத்தரசன் பதில் அளித்தார்.