உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : நாளை தொடங்கும் வாக்குப்பதிவு!
உலக நாடுகள் உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவுகள் நாளை (நவ-5) நடைபெற இருக்கிறது.
வாஷிங்க்டன் : நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலானது நாளை நடைபெற இருக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கும் இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பாகத் துணை அதிபரான கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில், அமெரிக்க ஜனத்தொகையில் சுமார் 16 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதியுடன் தயாராக உள்ளனர். அதில், 7 கோடிக்கும் மேல் உள்ளவர்கள் தங்களது வாக்கைச் செலுத்தி விட்டனர். மீதம் உள்ள மக்கள் நாளை வாக்களிக்க உள்ளனர்.
மேலும், நாளை வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஓர் அளவுக்கு அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்று தெரிந்து விடும். அதைத் தொடர்ந்து 2 நாட்களில் அமெரிக்க அதிபருக்கான விடையும் கிடைத்து விடும்.
இந்த தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்பும் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர் முன்னதாக நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு 49% சதவீதம் அளவிலான ஆதரவும், டிரம்ப்புக்கு 48% சதவீதம் அளவிலான ஆதரவும் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், நாளை நடைபெறும் இந்த அமெரிக்கா தேர்தலில் கடுமையான போட்டி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.