வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தேமலை குணப்படுத்துவது எப்படி?
சின்ன வெங்காயம், கருஞ்சிரகம், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தேமலை குணப்படுத்துவது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சின்ன வெங்காயம், கருஞ்சிரகம், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தேமலை குணப்படுத்துவது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை : மலசீசியா பர்பர் என்ற பூஞ்சை தொற்றால் தோலில் தேமல் ஏற்படுகிறது. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி இந்த தேமல் உருவாகிறது. இந்த தேமல் மார்பு, முகம், கழுத்து, முதுகு, கை, கால் போன்ற உடலின் பல்வேறு இடங்களில் தோலின் திசுக்களில் மாற்றங்களை உண்டாக்கும். இதனால், வெண்ணிற திட்டுக்கள் ஏற்படுகிறது இதனை தான் தேமல் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேமல் யாருக்கெல்லாம் வரும்?
இந்தியா போன்ற நாடுகளில் கணிசமான வெப்பநிலை உள்ள நிலப்பரப்பில் வாழ்பவர்களுக்கும், அதிகமாக வியர்வை சுரப்பவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் எளிதில் தேமல் வரக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேமலை குணமாக்கும் வீட்டு வைத்தியங்கள் :
1. ஆரம்ப நிலையில் தேமல் உடலில் தென்பட்டால் சின்ன வெங்காயத்தை நறுக்கி தேமல் உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இதன் மூலம் தேமல் விரைவில் குணமாகும்.
2. தேமல் அதிகமாக இருப்பவர்கள் கார்போக அரிசியை பொடி செய்து சலித்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இதில் சிறிதளவு எடுத்து தண்ணீர் ஊற்றி பசை போல தயார் செய்து தேமல் உள்ள இடத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி விட வேண்டும். இதுபோல் தினமும் செய்து வந்தால் நாளடைவில் தோலில் தேமல் மறைந்துவிடும்.
3.அரை ஸ்பூன் கருஞ்சீரகம், அரை ஸ்பூன் கார்போக அரிசி, ஒரு துண்டு கொப்பரை தேங்காய் இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கொப்பரை தேங்காயை இடித்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இவற்றை நன்கு மிக்ஸியில் பசை போல அரைத்து கொண்டு, பிறகு தேமல் உள்ள இடத்தை சோப்பு போட்டு கழுவி ஒரு துணியால் துடைத்து விட்டு இந்த பேஸ்ட்டை தடவி மூன்று நிமிடங்கள் மசாஜ் போல தடவி கொள்ள வேண்டும். பின்னர், அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் தேமல் குணமாவதை காணலாம்.
தேமல் வராமல் தடுப்பது எப்படி?
பொதுவாக இந்த தேமலால் பாதிக்கப்பட்டவர்களின் சோப்பு, ஆடைகள், துண்டு போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஒன்றாக ஒரே அறையில் தங்கி, ஒரே சோப்பு மற்றும் ஒரே துண்டுகளை பயன்படுத்துவதால் இது எளிதில் மற்றவர்களுக்கும் பரவும்.
பொதுவாகவே ஒவ்வொருவரும் தனித்தனியாக சோப்பு, துண்டு மற்றும் துணிகளை பயன்படுத்தி வருவதன் மூலம் மற்றவர்களுக்கு தோல் நோய்கள் பரவுவதை தடுக்கலாம். இந்த தேமல் மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில் தோல் மருத்துவரை அணுகுவதே மிகச் சிறந்தது.