“வளர்ப்பு மகளை திருமணம் செய்யலாம்”! ஈரானின் சர்ச்சை சட்டத்திற்கு குவியும் எதிர்ப்புகள்!
இளமையான ஈரானை உருவாக்க பெண்கள், தொடர்ச்சியாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஈரான் சுகாதாரத் துறை துணை அமைச்சர் அலிரேசா ரைசி தெரிவித்துள்ளார்.
தெஹ்ரான் : ஈரானில், 13 வயது நிரம்பிய வளர்ப்பு மகளை தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கும் சட்டமானது கடந்த வருடம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து உலகம் முழுவதும் உள்ள நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஏற்கனவே, ஈரானில் ஒரு ஆண்டில் மட்டும் 15 வயதுக்கு குறைவான சுமார் 1.84 லட்சம் சிறுமிகளுக்கு திருமணம் நடந்து வருகிறது. அதே போல, அந்த நாட்டில் 10 வயதுக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான சிறுமிகளுக்கும் திருமணம் நடைபெற்று வருகிறது.
மேலும், இளமையான ஈரானை உருவாக்க பெண்கள், தொடர்ச்சியாக குழந்தை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஈரான் சுகாதாரத் துறை துணை அமைச்சர் அலிரேசா ரைசி தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த ஆண்டு இறுதியில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்ற பெயரில் ஈரான் அரசு புதிய சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது.
அந்த சட்டத்தின்படி வளர்ப்பு மகளை, தந்தையே திருமணம் செய்து கொள்ளலாம் என்பது தான். அதாவது தத்தெடுத்து வளர்க்கும் பெண் குழந்தை அல்லது முன்னாள் கணவர் மூலம் மனைவி பெற்ற பெண் குழந்தையை 13 வயதை எட்டிய பிறகு தற்போதைய தந்தை திருமணம் செய்து கொள்ளலாம் என்பது தான் சட்டம்.
இந்த சட்டத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஈரான் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். மேலும், இந்த சட்டத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், உலகம் முழுவதும் உள்ள நாடுகளும் ஈரானில் நிறைவேற்ற பட்ட இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனக் குரல் கொடுத்து வருகின்றனர்.