ஐபிஎல் 2025 : கோலியை மீண்டும் கேப்டனாக போடுவது சரி கிடையாது – முன்னாள் வீரர் விமர்சனம்!
ஏழு, எட்டு வருடங்களுக்கு முன்பு டி20யில் இருந்த விராட் கோலி தற்போது இல்லை என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
மும்பை : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது மிக விரைவில் நடைபெற இருக்கிறது. தற்போது, அதற்கான தக்க வைப்பு வீரர்களின் பட்டியல் கடந்த வியாழனன்று வெளியானது. அந்த வரிசையில் பெங்களூரு அணி தங்களுடைய முதல் வீரராக விராட் கோலியை 21 கோடிக்குத் தக்க வைத்துள்ளது.
கடந்த 2008 ஆண்டுக்கு முதல் பெங்களூரு அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார். மேலும், அவர் ஒரு நட்சத்திர வீரர் என்பதால் ஆர்சிபி அணி அவரை தக்க வைத்துள்ளது. அதே நேரம் கடந்த ஒருசில வருடங்களில் டு பிளெஸ்ஸி பெங்களூரூ அணியின் கேப்டனாக செயலாற்றி வந்தார். ஆனால், இந்த முறை அவரையும் பெங்களூரு அணி விடுத்துள்ளது.
இதனால், பெங்களூரு அணிக்கு மீண்டும் விராட் கோலி கேப்டனாக செயல்படவுள்ளார் எனும் ஒரு தகவல் பரவி வந்தது. இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியிலிருந்து வந்தனர். இந்த நிலையில், அவர் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றால் அது சரியாக அமையாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சேரக்கர் பேசி இருக்கிறார்.
இது குறித்து சமீபத்தில் ஐபிஎல் ரீட்டென்சன் நிகழ்ச்சியில் பேசிய இவர், “உங்களுடைய மனதில் விராட் கோலியின் நட்சத்திர அந்தஸ்தை நீக்கிவிட்டு ஐபிஎல் தொடரில் அவருடைய செயல்பாடுகளை மட்டும் வைத்துப் பாருங்கள். குறிப்பாக ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் அவருடைய செயல்பாடுகளை தனித்தனியாகப் பாருங்கள்.
அதைப் பார்த்து விட்டு அவரை மீண்டும் கேப்டனாக நியமிக்கலாமா என்பது பற்றி முடிவை எடுங்கள். அவரை கேப்டனாக போடுவது சரியான முடிவு கிடையாது. கடந்த ஐபிஎல் தொடரில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 150ஆக இருந்தது. அதற்கு முந்தைய ஐபிஎல் தொடரில் 120 ஆக இருந்தது.
எனவே, ஒரு டி20 பிளேயராக விராட் கோலி ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா?. அவர் விராட் கோலியாக இருப்பதால் 95% ரசிகர்கள் கேப்டனாக பார்ப்பதற்கே விரும்புவார்கள். அவருடைய செயல்பாடுகளை பார்க்கும் போது போதுமானதாக இல்லை. எனவே நான் உணர்வுப்பூர்வமாக முடிவெடுக்க மாட்டேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அவர் சுமாரான ஃபார்மில் தான் இருக்கிறார். அதனால், இந்திய அணிக்கு அவர் தேவை தான். அதே போல, டி20 கிரிக்கெட்டில் அவர் 7 , 8 வருடங்களுக்கு முன்பிருந்த சிறந்த வீரராக தற்போது விராட் கோலி இல்லை என்பதே எனது கருத்து”, என சஞ்சய் மஞ்சேரக்கர் பேசி இருந்தார்.