இன்று முதல் துவங்கியது கந்த சஷ்டி திருவிழா..!
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக துவங்கி உள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக துவங்கி உள்ளது.
தூத்துக்குடி –கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விழா துவங்கி உள்ளது . குறிப்பாக முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது .அந்த வகையில் இந்த ஆண்டு இன்று யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி பெருவிழா துவங்கியுள்ளது. இதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். மேலும் பக்தர்கள் புனித நீராடி பச்சை நிற உடையில் மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கியுள்ளனர்.
பெரும்பாலானோர் இந்த ஆறு நாட்களும் கோவிலில் தங்கி கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டு வருவார்கள் எனக் கூறப்படுகிறது. பக்தர்கள் தங்குவதற்கு முன் ஏற்பாடாக 21 இடங்களில் தற்காலிக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் அதுமட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக வாகன காப்பகம், பேருந்து நிலையம் என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் அன்று பல லட்சக்கணக்கில் பக்தர்கள் பல மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வருகை தருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகின்றனர்.