IND vs NZ : தடுமாற்றத்துக்கு பின் நிதானம்! 28 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி!
இந்திய அணி, தற்போது முதல் இன்னிங்ஸ்க்கு 10 விக்கெட்டையும் இழந்து 263 ரன்கள் குவித்து, நியூஸிலாந்தை விட 28 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
மும்பை : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய நியூஸிலாந்து அணி 235 ரன்கள் குவித்தது.
அந்த இன்னிங்ஸில் பந்து வீசிய ஜடேஜாவும், வாஷிங்க்டன் சுந்தரும் சிறப்பாகப் பந்து வீசினார்கள். நியூஸிலாந்து அணியில் டேரில் மிட்செல் 82 ரன்களும், வில் யங் 71 ரன்களும் எடுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் செய்த போது நேற்றைய நாள் மிகவும் தடுமாறி விளையாடி வந்தது.
இந்த நிலையில், இன்றைய 2-ஆம் நாளில் ஜோடி சேர்ந்த கில்லும், பண்டும் நிதானத்துடன் விளையாடி அணிக்காக ரன்களை சேர்த்தனர். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இதில், நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ரிஷப் பண்ட் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின், கில்லும் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்து, துரதிஷ்டவசமாக சதத்தையும் தவற விட்டார். ஒரு முனையில் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தாலும், நியூஸிலாந்து அணியை விட அதிக ரன்கள் முன்னிலை பெறமுடியாமல் இந்திய அணி இருக்கிறது.
கடைசி நேரத்தில் வாஷிங்க்டன் சுந்தர் (38* ரன்கள்) ஆட்டமிழக்காமல் பொறுமையாக விளையாட இறுதியில் இந்திய அணி 263 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நியூஸிலாந்து அணியை விட 28 ரன்கள் முன்னிலைப் பெற்று வருகிறது இந்திய அணி. நியூஸிலாந்து அணியில் தங்களது முதல் இன்னிங்ஸில் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார்.