அடுத்த டெல்லி, சென்னையா.? மோசமடைந்த காற்றின் தரம்.!
தீபாவளி பண்டிக்கையை ஒட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக காற்றின் தரம் தலைநகர் சென்னையில் மோசமான நிலை எனப் பதிவாகியுள்ளது.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை உடுத்தி, இனிப்பு பலகாரங்கள் வழங்கி பட்டாசு வெடித்து பலரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். பட்டாசு வெடிக்க, நேர கட்டுப்பாடு, பசுமை பட்டாசுகள் என கூறினாலும் அதனால் ஏற்படும் காற்று மாசுவின் அளவும் ஆண்டுதோறும் தீபாவளி தினத்தன்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிக மாசடைந்த மாவட்டமாக தலைநகர் சென்னை உருவெடுத்துள்ளது. தீபாவளி தினத்தன்று சென்னை மாநகராட்சியின் காற்று மாசு (AQI -Air Quality Index) குறியீடு 216 என பதிவாகியுள்ளது. அதில், அதிகபட்சமாக பெருகுடியில் 262 எனவும், ஆலந்தூரில் 252 எனவும், அருகம்பாக்கத்தில் 248 எனவும், வேளச்சேரியில் 224 எனவும், கொடுங்கையூரில் 165 எனவும், ராயபுரத்தில் 169 எனவும் மணலியில் 189 எனவும் காற்றின் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.
நேற்று தீபாவளியன்று காற்றின் மாசு அவ்வாறு இருக்க, இன்று காலை 7 மணி நிலவரப்படி காற்றின் மாசு குறியீட்டு என் சராசரி சென்னையில் 163 என பதிவாகியுள்ளது. இன்றும், சில இடங்களில் காற்று மாசு 200ஐ தாண்டி காற்றின் தரம் மோசமான நிலையிலேயே உள்ளது.
இன்று காலை 7 மணி நிலவரப்படி, ஆலந்தூரில் 211 எனவும், பெருங்குடியில் 234 எனவும், வேளச்சேரியில் 219 எனவும் AQI (காற்றின் தரக் குறியீடு) பதிவாகியுள்ளது.
காற்றின் தரக் குறியீடு AQI அளவீட்டின்படி.,
- 0 – 50 : நல்லது.
- 51 – 100 : ஓகே ரகம்,
- 101 – 200 : சுமார் ரகம்,
- 201 – 300 : மோசமான நிலை,
- 301 – 400 : மிக மோசமான நிலை,
- 401 – 500 : கடும் மோசமான நிலை.
என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னையில் காற்றின் தரக்குறியீடு நேற்று மோசமான நிலையில் இருந்துள்ளது. இன்று சில இடங்களில் மட்டும் காற்றின் தரக்குறியீடு மோசமான நிலையில் இருந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக காற்று மாசடைந்த மாநிலமாக தலைநகர் டெல்லி உள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாய பொருட்கள காரணமாக காற்றின் தரம் எப்போதும் மோசமான நிலையிலேயே உள்ளது.