“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!
இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் தன்னை மனரீதியாக காயப்படுத்தியதாக கட்டுரை ஒன்றில் ஆஸ்திரேலியா வீரர் கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டு அவர் செயல்பட்டு வந்தார். அவர் கேப்டனாக இருந்த அந்த ஆண்டில் பஞ்சாப் அணியின் ஆலோசகராக சேவாக் நியமிக்கப்பட்டார். அந்த சமயம் தான், பல விஷயங்களால் சேவாக் செய்த மோசமான செயல்களால் கிளன் மேக்ஸ்வெல் கடுமையான வேதனையைச் சந்தித்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து கிளன் மேக்ஸ்வெல் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து அவர் அதில் கூறியதாவது ” எங்களுடைய பயிற்சியாளர்கள் அனைவரையும் எங்களுடைய வாட்சப் குரூப்பில் சேர்த்தால் அணியின் தேர்வு பற்றிய முடிவுகளை எடுக்கச் சிறப்பாக இருக்கும் என்பதால் அப்படி ஒரு முடிவு செய்தேன்.
எனவே, நான் எடுத்த இந்த முடிவுக்கு குரூப்பில் இருந்த அனைவரும் தங்களுடைய விருப்பத்தைச் சரி எனப் பகிர்ந்து கொண்டார்கள் . ஆனால், சேவாக் மட்டும் எதுவும் பேசாமல் ஒன்றும் சொல்லாமல் இருந்தார். அணி தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்துக்கொண்டிருந்த காரணத்தால் வீரர்களை மாற்றவேண்டும் என நினைத்துத் தான் இப்படி முடிவு செய்து பேசிக்கொண்டு இருந்தோம்.
ஆனால், அதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் சேவாக் நான் தான் அணியைத் தேர்ந்தெடுப்பேன் என அர்த்தம் இல்லாத முடிவை எடுத்தார். பிறகு, அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எங்களுடைய கடைசி போட்டி புனேவில் நடைபெற்றது. அந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நாங்கள் 73க்கு ஆல் அவுட் ஆகினோம். அந்த தினம் வழக்கமாக இல்லாமல் கொஞ்சம் தாமதமாகத் தான் செய்தியாளர்களைச் சந்திக்கச் சென்றேன்.
நான் செல்வதைப் பார்த்த பிறகு நீ செல்லவேண்டாம் நான் செல்கிறேன் என அவரே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதனையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பேருந்தில் ஏறிய பின் எங்களின் வாட்ஸப் குரூப்பில் நான் டெலிட் செய்யப்பட்டதும் எனக்குத் தெரிய வந்தது.
பிறகு எனக்குச் சேவாக் கால் செய்து உங்களுடைய விளையாட்டில் எனக்குப் பெரிய ஏமாற்றம் கிடைத்தது. கேப்டனாக நீங்கள் சரியாகச் செயல்படவில்லை என என்னைத் திட்டினார். எனக்கு அவர் திட்டியது ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலிருந்தது.
எனவே, அந்த தருணத்தில் நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் பிரிந்தோம் . பிறகு உங்களுடைய இந்த பேச்சால் உங்களுடைய நல்ல ஒரு ரசிகரை நீங்கள் இழந்துவிட்டீர்கள் எனக் கூறினேன். அதற்கு அவர் உன்னை மாதிரி ஒரு ரசிகன் எனக்குத் தேவையே இல்லை” எனக் கூறியதாகவும் கிளன் மேக்ஸ்வெல் வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார்.