கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்.!
கொலை வழக்கில் கைதாகி பெல்லாரி சிறையில் இருக்கும் கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு : கன்னட சினிமா நடிகரான தர்ஷன், ரேணுகாசாமி என்பவரை கொலை செய்ததாக பதியபட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். பவித்ரா கவுடா எனும் கன்னட நடிகைக்கு அவதூறாக குறுஞ்செய்தி அனுப்பியதாக ரேணுகாசாமியை கடத்தி தர்ஷன் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் பதியப்பட்டு இருக்கிறது.
இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் தர்ஷன் மீது அண்மையில் கர்நாடகா காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், தர்ஷன் கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு, பிசியோதரபி அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. சிகிச்சை தாமதமானால் சிறுநீரக பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு உடல்ரீதியிலான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது என அவரது வழக்கறிஞர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்திருந்தார்.
ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், கர்நாடாக உயர்நீதிமன்றத்தில் இந்த இடைக்கால ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. இதில் மருத்துவ காரணங்களால் 6 மாத காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.