திமுக குறித்து த.வெ.க தலைவர் விஜய் பேச்சு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்?
திமுக மீது த.வெ.க தலைவர் விஜய் விமர்சனம் வைத்து பேசியது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
சென்னை : நடந்து முடிந்த த.வெ.க மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தொடங்கி, பிளவுவாத அரசியல், ஊழல்வாத அரசியல் தனது எதிரிகள் எனவும், திராவிட மாடல் அரசு என மக்களை ஏமாற்றுகின்றனர் என நேரடி விமர்சனங்களை முன் வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
விஜயின் பேச்சுக்கு திமுகவை சேர்ந்த தலைவர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். முன்னதாகவே மாநாடு தொடங்குவதற்கு முன்பு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அப்படி பல கட்சிகள் உதயமாகியுள்ளன.
ஆனால், மக்கள் ஆதரவைப் பெறுவது தான் முக்கியம். ஒரு தயாரிப்பாளராக நான் முதலில் தயாரித்ததே விஜய் படம் தான். அவர் எனக்கு நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் என பேசியிருந்தார். அதற்கு மாநாடு நடைபெற்ற பிறகு விஜய் திமுகவை பற்றி விமர்சித்து பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ” விஜய் பேசியதை நான் முழுதாக கேட்கவில்லை.
அவர் பேசியதை கேட்டு விட்டு, பின்னர் பதில் அளிக்கிறேன். அவர் முழுதாக பேசியதை பார்த்த பிறகு தான், கருத்துக் கூற முடியும்.” என உதயநிதி கூறினார். இந்த நிலையில், சென்னையில் இன்று அவரிடம் செய்தியாளர்கள் விஜய் மாநாட்டில் பேசிய விஷயத்திற்கு உங்களுடைய கருத்து என்ன என்பது பற்றி கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் ” நான் என்ன பதில் சொல்வது ஏற்கனவே எங்களுடைய அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துவிட்டார். அது தான் என்னுடைய பதில் ” என கூறிவிட்டு சென்றார்.
ஆர்.எஸ்.பாரதி சொன்னது என்ன?
விஜய் மாநாட்டில் திமுகவை விமர்சித்து பேசியவுடன் முதல் ஆளாக அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியது அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி தான். அவர் பேசியது என்னவென்றால் ” திமுக என்பது ஒரு ஆலமரம் போன்றது. காய்த்த மரம்தான் கல்லடி படும். திமுக விமர்சனங்களை எதிர்கொள்ளும். யார் அரசியலுக்கு வந்தாலும் முதலில் திமுகவைத் தான் எதிர்ப்பார்கள். அப்படி விமர்சிப்பவர்களுக்கு நாங்கள் தக்க பதிலடியை கொடுப்போம்” என பேசியிருந்தார். எனவே, இது தான் தன்னுடைய பதில் என்று கூறியிருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.