பிசிறு தட்டாத மாநாடு., வியக்க வைத்த விஜயின் அரசியல் முதல் அனுபவம்.,
தான் கூற நினைத்த கருத்துக்களை தெளிவாக கூறி, தனது முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
சென்னை : திரைத்துறையில் உச்சத்தில் இருந்த நடிகர் விஜய், அடுத்தடுத்த படங்களில் எவ்வளவு அதிகமாக ஊதியம் கேட்டாலும் தயாரிப்பாளர்கள் கொடுக்க தயாராக இருந்த சூழலிலும், அதனை முழுதாக விடுத்து இனி நடிப்பு வேண்டாம்., முழுநேர அரசியல் மட்டுமே என களம் கண்டிருக்கிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
மேடை அரசியல் பேச்சுக்கள் பல கண்டாலும் , நேரடி கள அரசியலில் முதற்படி, முதல் மாநாடு , லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை இதனை வெற்றிகரமாக செயல்படுத்தி, தான் சொல்ல வேண்டிய , சொல்ல நினைத்த கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பாரா.? என்ற கேள்வி பலர் மனதில் எழுந்தது.
அத்தனை சதேகங்களுக்கும் தனது மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்ததன் மூலம் பதில் அளித்துள்ளார் தவெக தலைவர் விஜய். இந்த அரசியல் அனுபவம் கண்டு பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் இதற்கெல்லாம் விஜய் பல முறை தனது சினிமா மேடைகளை அரசியல் கருத்து மேடைகளாக மாற்றி அதன் மூலம் அரசியல் பயிற்சி மேற்கொண்டுள்ளார் என்பது நிதர்சனமான உண்மை. அரசியல் கருத்துக்களை சில சமயம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசியுள்ளார்.
வழக்கமான அரசியல் மேடை :
வழக்கமான அரசியல் கட்சி மாநாடு என்றால், மேடையில் பல தலைவர்கள் இருப்பார்கள். ஒருவரை ஒருவர் புகழ்வார்கள். முக்கிய நபரை அனைவரும் வெகுவாக புகழ்வார்கள். இறுதியில் தலைமை ஏற்று நடத்துபவர் பேசுவார். அவரும் முதலில் மேடையில் இருப்பவர்களை புகழ்ந்து பேசி பின்னர் தான் சொல்ல வேண்டிய கருத்துக்களை பேசுவார். பிறகு எதிராக உள்ள கட்சிகளை சுட்டிகாட்டி அவர்கள் மீது குற்றம் சாட்டுவர்.
மாறுபட்டு நின்ற தவெக மாநாடு :
இதுவெல்லாம் தவெக கூட்டத்தில் காணப்படவில்லை. மாநாடு ஆரம்பமானது, தனது கட்சி கொள்கைகள் பற்றி ஒரு நிர்வாகி விளக்கினார். பின்னர் தவெக செயல்திட்டங்கள் பற்றி ஒருவர் பேசினார். அடுத்து பொதுச்செயலாளர் N.ஆனந்தின் சிறிதாய் ஒரு வரவேற்புரை, உடனே தவெக தலைவர் விஜய் பேச ஆரம்பித்துவிட்டார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..,
அதே போல, விஜய்யும் , ‘ மேடையில் வீற்றிருக்கும் அவர்களே., இவர்களே ‘ என்ற பேச்சுக்களை முற்றிலுமாக தவிர்த்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என ஆரம்பித்து தான் சொல்ல வேண்டியதை தெளிவாக கூறிவிட்டு நகர்ந்தார். தனது அரசியல் கருத்துக்களையும், யாரை விமர்சிக்க விரும்பினாரோ அவர்கள் மீது நேரடியான விமர்சனத்தையும் முன்வைத்து சுருக்கமாகவே தனது உரையை முடித்தார். அவர் பேசியதில் தவிர்க்கப்பட வேண்டியவை என எதுவும் இன்றி அனைத்தும் முக்கிய பாயிண்ட்களாக மாறிப்போயின. அவ்வளவு நேர்த்தியாக தனது அரசியல் கன்னிப் பேச்சை நிறைவு செய்தார் தவெக தலைவர் விஜய்.
ஒரு நேர்த்தியான புதுமையான அரசியல் மாநாட்டில் பங்கு கொண்டதாக மாநாட்டில் பங்கேற்ற பலரும் கூறிச் சென்றதை காணமுடிந்தது.
அதேநேரம் மாநாடு ஆரம்பித்தது முதல் நேர்த்தியாக மாநாடு முடிந்ததாக கூறப்பட்டாலும், தொடங்குவதற்கு முன்னர் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றே கூற வேண்டும். முக்கியமாக மாநாடு மாலை 4 மணிக்கு தான் தொடங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே அதிகாலையில் இருந்து தொண்டர்கள் கூட்டம் குவிய தொடங்கி விட்டது . நண்பகலில் எல்லாம் பெரும்பாலும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டன.
சில குறைகள் :
எதிர்பார்த்ததை விட அதிகளவில் கூட்டம் கூடியதாக கூறப்பட்டதாலும், காலை முதலே பலரும் மாநாடு திடலுக்கு வந்தாலும், தண்ணீர் பற்றாக்குறை அங்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. இதனால் சிலர் அங்கங்கே மயங்கி விழும் சூழலும் நேர்ந்தது. இருந்தாலும், 150 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுக்கள் இருந்ததால் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் சென்னையை சேர்ந்த சார்லஸ் என்பவர் உயிரிழந்தார்.
இப்படியாக சில குறைகள் இருந்தாலும், மாநாடு நிகழ்வுகள் மூலம் குறைகளை மறக்க வைத்து தான் பேசிய பேச்சுக்களை அரசியல் மட்டுமல்லாது, பொதுமக்கள் மத்தியிலும் பேச வைத்த தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் , அரசியல் களத்தில் முதற்படியில் வெற்றி பெற்றார் என்றே பலரும் கூறி வருகின்றனர்.