டிஜிட்டல் கைது : ‘பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்’ ..பிரதமர் மோடி பேச்சு!
டிஜிட்டல் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் சற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி : டிஜிட்டல் கைது என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றும் மோசடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். மனதின் குரல் என்ற பெயரில் பிரதமர் மோடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் உரையாற்றி வருகிறார்.
அது போல நேற்று நடைபெற மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “டிஜிட்டல் கைது என்ற மோசடியில் தொலைபேசியில் அழைப்பவர் போலீஸாகவோ, சிபிஐயாகவோ, போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்தவராகவோ, ரிசர்வ் வங்கிக்காரராகவோ சொல்லிக்கொண்டு இப்படி விதவிதமான வகைகளில் போலி அதிகாரிகளாகப் பேசுவார்கள்.
மேலும் அவர்கள் மிகுந்த துணிச்சலோடு பேசுவார்கள். இவர்கள் உங்களைப் பற்றி போதுமான அளவு தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு உங்களிடம் திகைப்பை ஏற்படுத்துகிறார்கள். அதன் பிறகு, பயம் நிறைந்த ஒரு சூழ்நிலையை அவர்கள் உங்களுக்கு ஏற்படுத்துவார்கள், பல பல சட்டப் பிரிவுகளைச் சொல்லி பயம் காட்டுவார்கள்.
அவர்கள் எந்த அளவுக்கு உங்களுக்குள்ளே அச்சத்தை விதைப்பார்கள் என்றால், தொலைபேசியில் உரையாடும் போது நீங்கள் சுயமாக சிந்திக்கும் சக்தியையே இழந்து விடுவீர்கள். அதனால், நான் உங்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பின் மூன்று படிநிலைகளைப் பற்றிக் கூறுகிறேன்.
“நிதானியுங்கள், சிந்தியுங்கள், செயல்படுங்கள் இது போல அழைப்பு வந்தால், நிதானியுங்கள், அச்சப்படாதீர்கள், அமைதியாக இருங்கள், அவசரப்பட்டு எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாதீர்கள். உங்களால் முடிந்தால் ஸ்க்ரீன்ஷாட் அதாவது செல்பேசி திரையின் புகைப்படத்தை எடுங்கள், உரையாடலைக் கண்டிப்பாக ஒலிப்பதிவு செய்யுங்கள்.
டிஜிட்டல் கைது போன்ற அமைப்பு சட்டத்திலே கிடையாது. இது பச்சையான மோசடி, போக்கிரிகளின் கும்பல் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது. டிஜிட்டல் கைது குற்றங்கள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது.
இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண மாநில அரசுகளுடன் இணைந்து விசாரணை அமைப்புகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருப்பினும், பொதுமக்களும் இவ்விவகாரத்தில் உஷாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”, என பிரதமர் மோடி பேசி இருந்தார்.