த.வெ.க தலைவர் விஜயின் அரசியல் பேச்சுக்கள்..!
விஜய் ஒவ்வொரு சினிமா நிகழ்ச்சி மேடைகளில் முன் வைத்த தனது அரசியல் கருத்தை பற்றி இந்த பதிவில் காணலாம் .
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நாளை நடைபெற உள்ளது. தனது அரசியல் பயணத்தின் மிக முக்கிய படியை நடிகர் விஜய் முன்னெடுத்துள்ளார். நாளைய தினத்தை தவெகவினர் மட்டுமின்றி தமிழக அரசியல் களம் எதிர்நோக்கி காத்திருக்கிறது.
ஏற்கனவே, பெரியார், காமராஜர், அம்பேத்கரை முன்மொழிந்து முந்தைய மேடைகளில் பேசி வந்த தவெக தலைவர் விஜய், தற்போது தனது மாநாட்டிலும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பிரமாண்ட கட்அவுட்களை நிறுவியுள்ளார். அதே போல சுதந்திர போராட்ட தியாகிகள் வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோரது பிரமாண்ட கட்அவுட்களும் நிறுவப்பட்டுள்ளன.
இதனால், நாளைய தினம் விஜய் எவ்விதமான கொள்கைகளை முன்னெடுக்க போகிறார்.? எதனை முன்னிறுத்தி பேச போகிறார் என பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஆனால் நாளைய அரசியல் மேடைகளை தாண்டி பல சினிமா மேடைகளில் தனது அரசியல் பேச்சுக்களை பேசி மாநாட்டு பேச்சுக்கு விதை போட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். அப்படி அவர் பேசிய அரசியல் கருத்துக்களை கீழே காணலாம்.
விஜய் ஒவ்வொரு சினிமா நிகழ்ச்சி மேடையிலும் தனது அரசியல் கருத்துக்களை முன்வைத்து வருகிறார். கத்தி பட விழாவில் அவர் பேசுகையில், ” நமக்கு எந்தளவிற்கு ஆதரவு இருக்கிறதோ, அந்தளவிற்கு எதிர்ப்பும் உள்ளது. யாருடைய வெற்றியையும் தட்டிப் பறிக்க கூடாது. அதே போல நமது வெற்றியை விட்டுக் கொடுக்கவும் கூடாது. நம்மகிட்ட அன்பா பேசுனா அப்படியே பேச வேண்டும். வேற மாதிரி பேசுனா வேற மாதிரி தான் பேசனும். என பேசியிருந்தார்.
அடுத்து மெர்சல் பட நிகழ்வில் பேசுகையில், அவ்வளவு ஈசியா நம்மள வாழ விடமாட்டாங்க, போட்டு ஒரு வழி பண்ணுவாங்க., எல்லா பக்கமும் பிரஷர் இருக்கும். அதைத் தாண்டி தான் வரணும். எல்லாத்துக்கும் நம்மள பிடிச்சிருச்சினா வாழ்க்கை போர் அடிச்சிரும். சிலருக்கு பிடிக்காமல் இருந்தால் தான் வாழ்க்கை ஜாலியா இருக்கும்.” எனப் பேசினார்
அடுத்து, சர்கார் விழா மிக முக்கியமானது. ஏனென்றால் படமே அரசியல் சார்ந்தது. அந்த விழாவில் பேசுகையில், “நமது வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானால் உழைக்கலாம். நாம வெற்றி பெறக் கூடாது என ஒரு கூட்டம் உழைத்து கொண்டிருக்கிறது. எல்லாரும் தேர்தலில் நின்று சர்கார் அமைப்பாங்க. நாங்கள் சர்கார் அமைச்சிட்டு தேர்தல்ல நிற்க போறோம்” என படத்தின் ரிசல்ட்டை மறைமுகமாக குறிப்பிட்டு அரசியல் பேசினார். அந்த நிகழ்ச்சியில் கூட “நான் இந்த படத்தில் முதலமைச்சராக நடிக்கவில்லை. ஆனால் முதலமைச்சர் ஆனால் நடிக்கமாட்டேன்” என அரசியலுக்கு வந்த பிறகு படத்தில் நடிக்க மாட்டேன் என குறிப்பிட்டார்.
அடுத்து, வாரிசு இசை வெளியிட்டு விழாவில் பேசிய விஜய், 2026இல் கப்பு முக்கியம் பிகிலு என கூறினார். ஆனால் உடனடியாக 2026இல் உலக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுகிறது நான் அதனை குறிப்பிட்டேன் என சமாளித்தார் அப்போதைய நடிகர் விஜய்.
ஆனால், இனி மேடை பேச்சுக்களில் அரசியல் சார்ந்த கருத்துக்களை மறைமுகமாக கூறவேண்டியதில்லை. விஜயின் அடுத்தடுத்த மேடை பேச்சுகளில் பல்வேறு அரசியல் கருத்துக்கள் நேரடியாகவே பேசிவிடுவார் என்றும், அதற்கு முன்னோட்டமாக நாளைய மாநாடு அமையும் என்றும் பலரும் கருதுகின்றனர்.