தீபாவளி பட்டாசு வெடிக்கும் முன் இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்..,

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பான முறையில் வெடிப்பது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

crackers (1)

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பான முறையில் எப்படி வெடிப்பது, அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை இந்தச் செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். வித விதமான பலகாரங்கள், இனிப்புகள், புத்தம் புது ஆடைகள், வண்ணமயமான அலங்காரங்கள் என அடுக்கி கொண்டே போகலாம். அதிலும், குறிப்பாக குழந்தைகளுக்கு தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது தான் அவர்களின் முதல் ஆனந்தம். புத்தாடை, இனிப்புகள் எல்லாம் அப்புறம் தான்.

தீபாவளி பட்டாசுகளை வெடிப்பதற்காகவே, குழந்தைகள் தீபாவளியை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்கள்.  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பட்டாசு தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு பாதுகாப்பான முறையில்  பட்டாசுகளை வெடிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும்..

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?

பட்டாசுகளை வெடிப்பதற்கு முன்னதாகவே அவர்கள் உடுத்தி இருக்கும் ஆடை எளிதில் தீப்பற்ற கூடியதாக இருத்தல் கூடாது. பட்டு ,நைலான், பாலிஸ்டர் போன்ற ஆடைகள் அணிந்து கொண்டு வெடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் .அதற்கு மாறாக காட்டன் (பருத்தி) ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.

பட்டாசு வெடிப்பதற்கு முன் ஒரு வாளியில் தண்ணீர் மற்றும் மணலை நிரப்பி அருகாமையில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் பட்டாசை அணைப்பதற்கு இவை உதவியாக இருக்கும்.

பட்டாசு வைப்பதற்கு நீண்ட ஊதுபத்திகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள சிறிய ஊதுபத்திகளை பயன்படுத்தக்கூடாது. மிக அருகாமையில் நின்று பட்டாசு வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது கட்டாயம் பெரியவர்கள் யாரேனும் அருகில் இருக்க வேண்டும்.

மின்சார கம்பிகள், பெட்ரோல் பங்க், கேஸ் கடைகள் , கூரை வீடுகள், நெருக்கடியான இடங்கள் மற்றும் எளிதில் நெருப்பு பற்றும் இடங்களுக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இதற்கு மாறாக மைதானம் போன்ற பரந்த இடங்களை தேர்வு செய்வது நல்லது.

கண்ணாடி பாட்டில், டப்பா போன்றவற்றை பயன்படுத்தி பட்டாசுகளை வெடிக்க கூடாது. மேலும் ஒவ்வொரு பட்டாசுகள் வெடிப்பதற்கு முன் அந்த பட்டாசு பற்றிய தகவல்களை அறிந்து அதற்கு ஏற்ப பாதுகாப்பான முறையில் வெடிக்க வேண்டும். அதிலும் ராக்கெட் வெடி வெடிப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை அறிந்து பட்டாசு வெடிக்க வேண்டும்.

சங்கு சக்கரம் மற்றும் புஸ்வானம் வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த பட்டாசுகள் வெடிக்காது என கவனக்குறைவோடு அதன் அருகாமையில் நின்று கொண்டிருப்போம்.. சில சமயங்களில் இதிலிருந்து வரும் தீப்பொறியின் மூலம் கூட எளிதில் தீப்பற்றவும், சில நேரத்தில் அந்த வகை பட்டாசுகள் கூட வெடிப்பதற்கும் வாய்ப்புள்ளது. கம்பி மத்தாப்பு, சாட்டை வெடிகளை வெடித்த பிறகு அதை தண்ணீர் ஊற்றி அணைத்து விட வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது. அதன் மீது தண்ணீர் ஊற்றிவிட வேண்டும்.

பட்டாசு வெடித்த பிறகு கைகளை சானிடைசர் பயன்படுத்தி கழுவ கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கொரோனா காலகட்டத்தில் அதன் தாக்கத்தை குறைப்பதற்காக சானிடைசர் பயன்பாட்டிற்கு வந்தது .சானிடைசரில் அதிக அளவு ஆல்கஹால் உள்ளது. பட்டாசு வெடித்து விட்டு பட்டாசு மருந்துடன் கைகளை சனிடைசரில் கழுவும் போது எளிதில் தீப்பற்ற வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால் கைகளை சுத்தம் செய்ய சாதாரண சோப் பயன்படுத்துவதே சிறந்தது.

காயம் ஏற்பட்டால் உடனே குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பிறகு சிறிய காயமாக இருந்தால் தேன் அல்லது கற்றாழை ஜெல்லை அதன் மீது தடவலாம். இது தழும்பு ஏற்படுவதை தவிர்த்து எரிச்சலையும் குறைக்கிறது. பெரிய தீ காயமாக இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.

பட்டாசுகள் வெடிப்பதில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அதில் பல பின் விளைவுகளும் உள்ளது .வெடியிலிருந்து  வெளியேறும் சத்தம் காதுகளை பாதிப்பதோடு அதிலிருந்து வெளியேறும் புகை சுவாச மண்டலத்தையும் பாதிக்கிறது .அதுமட்டுமல்லாமல்  சுற்றுச்சூழலையும் மாசடைய செய்கிறது.

பட்டாசு வெடிக்கும் போது கட்டாயம் கால்களில் செருப்பு அணிந்து கொண்டு வெடிக்க வேண்டும். இந்த தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக விழிப்போடும், விழிப்புணர்வோடும் கொண்டாடி மகிழுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்