கரையை கடந்த டானா புயல்: முகாம்களில் பிறந்த 1,600 புதிய குழந்தைகள்!
டானா புயல் காரணமாக நிவாரண மையங்களுக்கு இடம் பெயர்ந்த 4,431 கர்ப்பிணிப் பெண்களில் 1,600 பேர் குழந்தை பெற்றெடுத்தனர்.
ஒடிசா : மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த டாணா புயல், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கத்தின் பிதர்கணிகா – ஒடிசாவின் தாமரா இடையே தீவிர புயலாக கரையை கடந்தது.
புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தில், நேற்று மாலைக்குள் 5.84 லட்சம் மக்களை வெளியேற்றியது.
“அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளில் இருந்து அனைத்து மக்களையும் வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளோம்” என்று அம்மாநில முதலமைச்சர் கூறினார். குறிப்பாக, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 4,431 கர்ப்பிணிப் பெண்களில் 1,600 பேர் குழந்தை பெற்றுள்ளதாக ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஆபத்தான பகுதிகளில் இருந்து சுமார் 5.84 லட்சம் பேர் அருகில் இருந்த முகாம்களில் தஞ்சமடைந்தனர். இந்த மக்கள் மொத்தம் 6,008 முகாம்களில் தங்கியுள்ளனர், அங்கு அவர்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள சில முகாம்களை ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, “பாலசோர் மாவட்டத்தில் 172,916 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து மயூர்பஞ்ச் 100,000 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் முதல்வர் கூறினார்.
மேலும், பத்ரக்கில் இருந்து 75,000 பேரும், ஜாஜ்பூரில் இருந்து 58,000 பேரும், கேந்திரபாராவிலிருந்து 46,000 பேரும் வெளியேற்றப்பட்டனர். இதனிடையே, மொத்தம் 292 மருத்துவக் குழுக்களும், 155 கால்நடை மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளனர்.
நிவாரண முகாம்களில் இருப்பவர்களுக்கு போதுமான உலர் மற்றும் சமைத்த உணவு, மருந்துகள் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், 19,476 கால்நடைகள் தீவனத்துடன் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.