டானா புயல் : இந்த 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
டானா புயல் காரணமாக ஒடிசாவின் மயூர்பஞ்ச், கட்டாக், உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒடிஷா : வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல் எப்போது கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் லேட்டஸ்டான தகவல் ஒன்றை கொடுத்து இருந்தது. அதன்படி, நள்ளிரவு முதல் அக்டோபர் 25 ஆம் தேதி காலை வரை கடுமையான சூறாவளி புயலாகவே வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை ஒட்டியுள்ள பூரி மற்றும் சாகர் பகுதிகளுக்கு அருகில் பிதர்கனிகா மற்றும் டமாரா (ஒடிசா) இடையே கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்தது இருந்தது.
அதனை தொடர்ந்து, புயல் கரையை கடப்பதால் பல மாவட்டங்களுக்கு கனமழை, மிக கனமழைக்கான ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.
அதன்படி, ஒடிசாவின் மயூர்பஞ்ச், கட்டாக், ஜாஜ்பூர், பாலசோர், பத்ரக், கேந்திரபாரா மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ‘ரெட் எச்சரிக்கை’ விடுத்தது. அதைப்போல, பூரி, குர்தா, நாயகர் மற்றும் தேன்கனல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நிலச்சரிவு எச்சரிக்கை
அதே சமயம், டானா புயல் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதால் வெள்ளிக்கிழமை அதிகாலை பிடர்கனிகா தேசிய பூங்காவிற்கும் தாம்ரா துறைமுகத்திற்கும் இடையில் நிலச்சரிவை ஏற்படுத்தக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
மேலும், டானா புயல் ஒடிசா கடற்கரையை நெருங்கி வருவதால், பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஒடிசா மாவட்டங்களான மஹாகல்பாதா மற்றும் கேந்திரபாரா போன்ற பகுதிகளில் டானா புயல் நெருங்கி வருவதைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க, வீடு வீடாகச் சென்று ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது.